இந்தியா

“வட இந்தியா முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை... தேசியத் தலைவர் மு.க.ஸ்டாலின்" - விடுதலை நாளேடு பாராட்டு!

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு தி.மு.க.வின் மிகப்பெரிய சட்டப் போராட்டமே காரணம் என விடுதலை நாளேடு பாராட்டியுள்ளது.

“வட இந்தியா முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை... தேசியத் தலைவர் மு.க.ஸ்டாலின்" - விடுதலை நாளேடு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு தி.மு.க.வின் மிகப்பெரிய சட்டப் போராட்டமே காரணம் என விடுதலை (11.1.2022) நாளிதழில் பாராட்டி செய்தி வெளிவந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு:

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மிகப் பெரிய சட்டப் போராட்டத்திற்கு பின் இந்த உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டி உள்ளது.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று முறையான இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வைத்த நிலையில் இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஒரு வகையில் தமிழ்நாடு மூலம் மொத்த தேசத்திற்கும் வழங்கப்பட்ட புத்தாண்டுப் பரிசாக பார்க்கப்படுகிறது!

ஒவ்வொரு ஆண்டும் 4000க்கும் அதிகமான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இதனால் தங்கள் வாய்ப்புகளை இழந்தனர். மருத்துவப் படிப்பில் இவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. ஆதிக்க ஜாதிகளின் சூழ்ச்சியால் இவர்களின் மருத்துவக் கனவு பறிபோனது. இப்போது இந்த சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இந்த தீர்ப்பை வரவேற்று இருந்தார். இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் தி.மு.க.வின் மிக நீண்ட சட்ட போராட்டம் இருக்கிறது.

இந்த சட்டப் போராட்டத்தை தொடங்கி அதை வெற்றிகரமாக முடித்து வைத்தது தி.மு.க. தான். முதலில் 2019இல் ஜூலை மாதம் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து தி.மு.க உறுப்பினர் பி.வில்சன் மாநிலங்களவையில் பேசினார். இதுதான் தி.மு.க போட்ட முதல் விதை. அதன்பின் நவம்பர் 1 - 2019 அன்று இந்த இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய ஒன்றிய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தி.மு.க. சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர் அதே மாதம் தி.மு.க. சார்பில் மாநிலங்களவகையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2019லேயே வலியுறுத்தினார். பின்னர் 16.12.2019 அன்று இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் பி.வில்சன் பேசினார். இந்தப் பேச்சுதான் அப்போது தேசிய அளவில் கவனம் பெற்றது. புள்ளி விவரங்களோடு இவர் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு இதர பிற்படுத்தப்பட்ட மாணவருக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இவர் கூறியது சமூகவலைதளங்களில் வடஇந்தியா முழுக்கப் பரவியது. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மக்கள் இடையே இந்த பேச்சு மிக முக்கியமான கவனத்தை பெற்றதோடு மற்ற வட மாநிலங்களிலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்பின் தொடர்ந்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, பி.வில்சன் இது குறித்து மாநிலங்களையில் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் முதல் கட்சியாக கடந்த 28.05.2020இல் அகில இந்திய மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் படி ஏறியது தி.மு.க. - தி.மு.க. சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டதோடு, இன்னொரு பக்கம் ஒன்றிய அரசுக்கு எதிராக தி.மு.க. தீர்மானம் கொண்டு வந்தது. தி.மு.க. சார்பாக தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி பேசிய அதே மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்தான் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடினார்.

வழக்குரைஞரான இவர் தானே வாதிட்டு தொடர்ந்து இந்த வழக்கில் புள்ளிவிவரங்களோடு கூடிய முக்கிய வாதங்களை வைத்து வந்தார். இதை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. பின்னர் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல அங்கு மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுதான் இதர பிற்படுத்தப்பட்டோர் வழக்கில் கிடைத்த முதல் வெற்றி. அதாவது மொத்த இந்தியாவிற்குமான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தி.மு.க. தொடுத்த வழக்கு காரணமாக கிடைத்தது. ஆனால் ஒன்றிய அரசு இதை செயல்படுத்தாமல் இருந்த நிலையில்தான் தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது மருத்துவ படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வழக்கில் திமுகவின் சட்ட போராட்டம் மிக முக்கியமானது. இதன் காரணமாக தற்போது வடஇந்தியாவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சங்கங்கள், பல்வேறு முற் போக்கு அரசியல் அமைப்பு கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், தி.மு.க.வையும் பாராட்டி வருகின்றன

“சமூக நீதிக்கான ஸ்டா லின்” என்ற பொருள்படும் வகையில் ##Stalin4SocialJustice என்ற டேக் இதனால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து வடஇந்திய தலைவர்கள் யாரும் கவலைப்படவில்லை. வடஇந்திய பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் அமைதியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் மக்களுக்கான உரிமையை நிலைநாட்டி இருக்கிறார். அவர் ஒரு மாநில தலைவர் அல்ல. அவர் ஒரு தேசியத் தலைவர். தமிழ்நாடுதான் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்து இருக்கிறது என்று பலர் பாராட்டி உள்ளனர்.இந்தியாவின் மிகவும் முற்போக்கான தலைவர் அவர். மு.க.ஸ்டாலினின் இந்த முயற்சிக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். வடஇந்திய தலைவர்கள் இப்போதெல்லாம் செய்யத் தவறும் விஷயத்தை முதல¬மைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து இருக்கிறார், அவருக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நன்றி என்று வடஇந்தியர்கள் பலர் இணையத்தில் ##Stalin4SocialJustice டேக்கில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். 8.1.2022 அன்று பிற்பகலில் தொடங்கிய டிரெண்ட் இப்போது வரை நீடித்து வருகிறது

நீங்கள் வட இந்தியாவை சேர்ந்தவரா.. ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவரா? அப்படி என்றால் உங்களுக்கும் சேர்ந்து தமிழ்நாடு போராடி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல நீங்கள் மறக்க வேண்டாம் என்று மண்டல் ஆணையத்தின் தலைவர் மண்டலின் வாரிசு திலீப் மண்டலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிப் பேசி இருக்கிறார்.

தி.மு.க.வின் சட்டப் போராட்டம் காரணமாகத்தான் இதர பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தேசிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நன்றி: விடுதலை

banner

Related Stories

Related Stories