இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின், இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாகப் பிரிந்தது. அப்போது பாகிஸ்தான் சென்ற முகம்மது சித்தி, இந்தியாவில் வசிக்கும் ஹபீப் ஆகிய சகோதார்களும் பிரிந்தனர்.
முகம்மது சித்தி பாகிஸ்தானின் ஃபைஸ்லாபாத்தில் வசித்து வருகிறார். ஹபீப், தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வருகிறார்.
பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்களும், 74 ஆண்டுகளாக சந்திக்கவே இல்லை. இந்நிலையில் இன்று கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சர்தார் சாஹிப் புனித தலத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
74 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட இருவரும் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். இந்த நெகிழ்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்தார்பூர் காரிடார் அண்மையில் திறக்கப்பட்டதால் சகோதரர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.