கடந்த 2014 பொதுத் தேர்தலில் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகக் கூட்டுவேன், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய விலை வழங்குவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசிய காரணத்தால் தான் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் உள்ளிட்ட எதையும் நிறைவேற்றாமல், மக்கள் விரோதமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விவசாயிகளைக் கலந்து பேசாமல் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் பெரும்பான்மை எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்று வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றியது. இதனால் குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுகிற உரிமை விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டது. விவசாயிகளின் தானியங்களை கொள்முதல் செய்கிற ஏகபோக உரிமை ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து விவசாயிகள் கடும் குளிர் மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடந்த ஓராண்டு காலமாக போராடி சமீபத்தில் தான் மோடி அரசு, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக கூறியதன் பேரில் விவசாயிகள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
மோடி அரசின் இந்த அறிவிப்பிற்குக் காரணம் விவசாயிகள் நலன் சார்ந்ததல்ல, மாறாக பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் தோல்விகளும், வருகிற சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றியைப் பாதிக்கும் என்பதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீண்டகாலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்குக் கூட மோடி அரசு தயாராக இல்லை.
ஆனால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 4 கோடி விவசாயிகள் பெற்ற கடன் தொகையான ரூபாய் 68 ஆயிரம் கோடியை ஒரே நேரத்தில் தள்ளுபடி செய்து விவசாயிகளின் கடன் சுமையை அகற்றியது. கடன் நிவாரணம் பெற்றவர்களின் பட்டியல் அந்தந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. இதை முன்மாதிரியாகக் கொண்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு தொடர்ந்து பா.ஜ.க. அரசு மறுத்து வருகிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வசூலிக்க முடியாத வாராக் கடன் 2.02 லட்சம் கோடி ரூபாயை கடந்த 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் மத்திய பா.ஜ.க. அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதைவிட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு அரசு தான் மோடி அரசு என்று கூறுவதில் என்ன தவறு ?
கடந்த 10 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வாராக் கடன் ரூபாய் 11 லட்சத்து 68 ஆயிரம் கோடி. ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்த 2014 முதல் 2021 வரை 7 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் ரூபாய் 10.7 லட்சம் கோடி. இதில் 75 சதவிகித கடன்கள் பொதுத்துறை வங்கிகளைச் சார்ந்தது. இதில் தொழிலதிபர் நீரவ்மோடி, மல்லையா உள்ளிட்ட 50 பேர்களின் கடன் தொகையான ரூபாய் 68 ஆயிரம் கோடியும் அடக்கமாகும்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் 7 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனில் ரூபாய் 10.7 லட்சம் கோடி தள்ளுபடி செய்த பா.ஜ.க. அரசு ரூபாய் 2 லட்சம் கோடி விவசாயிகள் கடனை சுலபமாக தள்ளுபடி செய்திருக்கலாம். இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்திருப்பார்கள். ஆனால், விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து அவர்களது வாழ்வாதாரத்தை பாழடிக்கிற முயற்சியில் ஈடுபட்ட பா.ஜ.க. அரசு, தீவிரமான விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக பணிய நேரிட்டது. ஆனால், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ, கோரிக்கைகளை பரிசீலிக்கவோ மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை.
ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கார்ப்பரேட் நிறுவனங்களே கோரிக்கை வைக்காத நிலையில் பா.ஜ.க. அரசே முன்வந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஆணையிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை வாராக் கடன் என்று கூறி தள்ளுபடி செய்தது. இதைவிட அப்பட்டமான மக்கள் விரோத கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய விவசாய விரோதப் போக்கைக் கண்டித்து விவசாயிகள் தலைநகர் தில்லியில் ஓராண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தியதால் மத்திய பா.ஜ.க. அரசு பணிந்தது. அதைப் போல விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பி நாடு முழுவதும் எழுச்சிமிக்க போராட்டத்தை நடத்தினால், மத்திய பா.ஜ.க. அரசை கடன் தள்ளுபடி கோரிக்கையை ஏற்கும் வகையில் பணிய வைக்க முடியும். இதற்கு விவசாயச் சங்கங்களும், விவசாய பெருங்குடி மக்களும் தயாராக வேண்டும்.