முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.14, 2021) தலையங்கம் வருமாறு:
ஓராண்டு காலம் நடத்திய வீறுகொண்ட போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் கடந்த 11 ஆம் தேதி வீடு திரும்பியிருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களது போராட்ட மன உறுதியும், எதையும் எதிர்கொள்ளும் தியாக உள்ளத்தையும், குணத்தையும் பாராட்ட வேண்டும் என்பதை விட, அத்தகைய மன உறுதியும், தியாக உள்ளமும் இந்தியா முழுவதும் பரவ வேண்டும். நின்று நிலைக்க வேண்டும்.
ஒரு நாளில் முடிந்துவிடும், ஒரு வாரத்தில் முடிந்துவிடும், ஒரே மாதத்தில் காணாமல் போய்விடுவார்கள் என்றுதான் பலரும் நினைத்தார்கள். இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும், கூட்டம் குறைந்து விடும் என்ற தங்களது ஆசைகளைச் செய்தியாக்கி வாசித்தார்கள். ‘மூன்று சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாங்கள் போகப் போவதில்லை’ என்பதில் இறுதியாகவும், உறுதியாகவும் விவசாயிகள் இருந்தார்கள்.
“விவசாயம்தான் அவர்களது வாழ்க்கை, அதையே விட்டுவிட்டு இவர்கள் போராட்டம் நடத்த வந்துவிட்டார்கள்” என்று அவர்கள் மீது பழிச்சொல் சொல்லப்பட்டது. “ஆமாம் ! விவசாயம்தான் எங்கள் வாழ்க்கை! இந்த மூன்று வேளாண் சட்டங்களும் வருமானால் எங்கள் வாழ்க்கையே போய்விடும்! அதனால்தான் எங்கள் நிலத்தைக் காப்பாற்றுவதற்காகவே போராட வந்திருக்கிறோம்!” என்று விவசாயிகள் சொன்னார்கள்.
அவர்கள் மீது அரசியல் சாயம் பூசுவதற்கான முயற்சிகள் ஏராளமாக எடுக்கப்பட்டன. அரசியல் கட்சியினர் வெளியில் இருந்து ஆதரித்தார்களே தவிர, உள்ளே வரவில்லை. விவசாயிகளும், அதை எதிர்பார்க்கவில்லை.
இவர்களைத் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாகக் கட்டமைக்கும் சதிச் செயலும் விவசாயிகளை மனமாற்றம் செய்யவில்லை. இன்னும் சொன்னால், இந்த அவதூறுகளுக்குப் பிறகுதான் அவர்கள் மேலும் மேலும் உறுதியாக ஆனார்கள்.
பேச்சுவார்த்தை என்ற பெயரால் இழுத்தடிப்புகள் நடந்தன. அதனை முற்றிலும் உணர்ந்தவர்களாக விவசாயிகள் இருந்தார்கள். வேளாண் சட்டத்தில் சில வரிகளைச் சேர்க்க, சில வரிகளை எடுக்கச் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எதற்கும் அவர்கள் மசியவில்லை. “வார்த்தைகளைச் சேர்ப்பதால், எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. முழுமையாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்” என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.
தொடக்கத்தில் என்ன கோரிக்கையை முன்வைத்து ஓராண்டுக்கு முன்னால் போராடுவதற்கு தலைநகர் டெல்லிக்கு வந்தார்களோ - அந்த ஒற்றைக் கோரிக்கையில் உறுதியாக இருந்தார்கள். அதுதான் இன்று அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
போராட்டக் களத்தில் இருந்து கடந்த 11 ஆம் தேதி தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள் விவசாயிகள். அவர்கள் போராட்டக் களத்துக்கு தங்களோடு கொண்டு வந்தது டிராக்டர். ஆரம்பத்தில் வரும்போது அந்த டிராக்டர்களில் புயலாக வந்தார்கள். இதோ இப்போது அந்த டிராக்டர்கள் மீது பூக்கள் தூவப்பட்டுள்ளன. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் அவர்கள் ஊர் திரும்பி இருக்கிறார்கள். பூ ஒன்று புயலானது முதலில். அந்தப் புயல் வேகமே, இறுதியில் அவர்கள் மீது பூக்களையும் தூவி உள்ளது.
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள். முதலில் போராட்டக் களத்துக்கு வரும் போது அவர்களில் பலருக்கும் சாதாரண அறிமுகம் கூட இல்லாமல் இருக்கலாம். யார் என்றோ, எந்த மாவட்டம் என்றோ, எந்த மாநிலம் என்றோ தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஓராண்டுக் காலம், அவர் களுக்குள் நட்பையும், குடும்பப் பாசத்தையும் உருவாக்கி இருக்கிறது. ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனமில்லாமல் பிரிந்திருக்கிறார்கள். பலரதுகண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. போராட்டம் என்பது இலட்சக்கணக்கான விவசாயிகளுக்குள் மகத்தான தோழமை உணர்வை விதைத் திருக்கிறது. ‘இந்த ஓராண்டுக் காலத்தை எங்களால் மறக்க முடியாது’ என்று அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டார்கள்.
டெல்லி - ஹரியானா எல்லையான டிக்ரி, சிங்கு, டெல்லி - உத்தரப் பிரதேச எல்லையான காஜிப்பூர் - ஆகிய மூன்றும்தான் விவசாயிகளின் வீறுகொண்ட போராட்டத்தின்முனைகளாக இருந்தன. அந்த மூன்று முனைகளும் எரிமலையாகத்தான் கடந்த ஓராண்டு காலமாகக் காட்சியளித்தது. இதோ இப்போது மலர்களின் தூவல்களாகக் காட்சி அளித்தன. எல்லாப் போராட்டங்களும் ஆயுதங்களால் ஆனவை அல்ல. அதற்கு அடிப்படை மக்கள் சக்திதான் என்பதை நிரூபிப்பதாக இந்தக்களம் காட்சி அளித்தது. எங்கேயும் வன்முறை இல்லை. ஒரே ஒரு முறை நடந்த வன்முறையும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு தொடர்பு இல்லாத நபர்களால், திட்டமிட்ட சதியாக நடத்தப்பட்டவைதான் என்பதும் சில நேரங்களில் வெளிச்சத்துக்கு வந்தது. மற்றபடிவன்முறை துளியும் இல்லை.
போராட்டத்தை முடித்துவிட்டு விவசாயிகள் வீடு திரும்பிய நாளில் அந்த இடத்தில் காவலர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. போராட்டம் தொடங்கிய காலத்திலும் அப்படித்தான். தடுப்புகளை தலை நகருக்குள் போட்டு வைத்தது டெல்லி காவல்துறை. அதே நேரத்தில் போராட்டக்காரர்களைக் காக்கும் பொறுப்பு காவலர்களுக்கு உண்டு. அதற்கு ஏற்ப காவலர்கள் நிறுத்தப்பட்டார்களா என்றால் இல்லை. அதுதான் இறுதிவரை தொடர்ந்தது. கலையும் நாளிலும் பெரிய அளவில் காவலர்கள் இல்லை. விவசாயிகளே, விவசாயிகளைக் காத்துக் கொண்டார்கள்.
விவசாயிகளே வந்தார்கள். விவசாயிகளே போராடினார்கள். விவசாயிகளே வென்றார்கள் - என்று சொல்லக் கூடிய வெற்றி வரலாற்றுடன் விவசாயிகள் வீடு திரும்பி இருக்கிறார்கள்.
அவர்களது மனங்களைப் போலவே நிலங்கள் செழிக்கட்டும்!