மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சுபாங்கி. இவர் வீட்டில் பணப் பிரச்சனை இருந்ததால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இருப்பினும் கடன்தான் அதிகரித்ததே தவிர அவரது பணப் பிரச்சனை தீரவில்லை.
இந்நிலையில் குடும்ப பிரச்சனைகளுக்கு ஆன்லைனில் பூஜை செய்து தீர்வு வழங்குவதாக சாமியார் ஒருவரின் டி.வி விளம்பரத்தைப் பார்த்துள்ளார் சுபாங்கி. பின்னர், அந்த சாமியாருக்கு போன் செய்து தனது பிரச்சனைகளைக் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த சாமியார் உனது பிரச்சனையை தீர்ப்பதாகக் கூறி கொஞ்சம் கொஞ்சமாகப் ஆன்லைன் மூலம் பணம் பெற்று வந்துள்ளார். இப்படி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.37 லட்சத்தை அவரிடமிருந்து அந்த சாமியார் பெற்றுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேலையும் கிடைக்கவில்லை, நிதி நெருக்கடியும் தீரவில்லை.
இதையடுத்து சாமியாரை நேரில் சந்திக்கலாம் என நினைத்து அந்தப் பெண் அயோத்தி சென்றுள்ளார். அப்போது அந்த சாமியார் குறித்து விசாரித்தபோது அப்படி ஒரு சாமியார் இங்கு இல்லை என பலர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் போலி சாமியாரிடம் ரூ.37 லட்சத்தை இழந்ததால் மன வருத்தத்தில் இருந்துவந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலி சாமியாரிடம் ரூ.37 லட்சம் பணத்தை இழந்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.