கர்நாடகா மாநிலத்தில் அரசுத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குப் புகார் சென்றுள்ளது.
இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 15 அதிகாரிகளைக் குறிவைத்து அவர்களுக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட 68 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத தங்கம், மூட்டை மூட்டையாகப் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை ஊழல் தடுப்புப் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறிப்பாக விவசாயத்துறை இணை ஆணையர் ருத்ரேஷ் அப்பார் வீட்டில் மட்டும் ரூ. 9 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கம், ரூ. 15 லட்சம் மற்றும் 100 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேபோல், தொட்புலாப்பூர் வருவாய் ஆய்வாளர் லட்சுமி நரசிம்மா வீட்டில் 5 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்களை ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஊழல் தடுப்புப் பிரிவினர் ஒரு பொதுப்பணித்துறை அலுவலரின் வீட்டில் பைப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பைப்பை உடைத்து அதிலிருந்து பணத்தைக் கைப்பற்றினர். அந்த பைப்பில் ரூ. 40 லட்சம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் ஒரே நேரத்தில் 15 அரசு அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.