நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி ராதா. இவர்களுக்கு நிரஞ்சன் என்ற மகன் உள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருப்பூர் மாநகர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதிக்கு குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளனர்.
நிரஞ்சன் கோவையில் உள்ள தனியார் மென்பொருள் அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலகட்டம் என்பதால் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்துள்ளார் நிரஞ்சன். கடந்த ஆண்டு நாகராஜ் இதய பிரச்சனை காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிரிழந்த நாள் முதலே ராதா மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவருமே மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆறுதலால் மன உளைச்சலோடு வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் , நிரஞ்சனின் நண்பர் இவர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார். கதவை திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராதா மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
உடனடியாக அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் , தந்தையின் மீது வைத்த பாசம் குறித்து நிரஞ்சன் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அக்கடிதத்தில், “தந்தை இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை என்றும் , நாங்கள் வாழ முயற்சித்தோம் ஆனால்....” என எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.