இந்தியா

“பெகாசஸ் விவகாரம் - உளவு மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டது” : மோடி அரசை சிக்க வைத்த இஸ்ரேல்!

பெகாசஸ் உளவு மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்க முடியும் என இஸ்ரேல் தூதர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“பெகாசஸ் விவகாரம் - உளவு மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டது” : மோடி அரசை சிக்க வைத்த இஸ்ரேல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது.

இந்தியாவில் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து ஒன்றிய அரசிடம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். ஆனால் ஒன்றிய அரசு ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு உரியப் பதிலை அளிக்காமல் கூட்டத்தொடரைத் தள்ளிவைத்துக் கொண்டே வந்தது.

இதனிடையே ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பெகாசஸ் மென்பொருளை வைத்து ஒன்றிய அரசு உளவு பார்த்தாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க வல்லுநர்கள் குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில், உளவுபார்க்கும் மென்பொருளான பெகாசஸை தனியாருக்கு விற்கமுடியாது என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலான் கூறியது, ஒட்டுகேட்பு விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பெகாசஸ் விவகாரம் - உளவு மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டது” : மோடி அரசை சிக்க வைத்த இஸ்ரேல்!

இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பெகாசஸ் பிரச்சனை அந்நாட்டின் உள்விவகாரங்களாகும். இதில் தலையிட இஸ்ரேல் விரும்பவில்லை. NSO என்பது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம், தங்களின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இஸ்ரேல் அரசிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். மேலும் மென்பொருள் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய இஸ்ரேல் அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, மென்பொருள் உள்ளிட்ட பொருட்களைத் தனியார் அமைப்புகளுக்கு NSO நிறுவனம் விற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தூதரின் இந்த பதிலைப் பார்க்கும் போது உளவு பார்ப்பதற்காகவே ஒன்றிய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறது என்பது நிரூபிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெகாசஸ் எனப்படும் இந்த ரகசிய சாப்ட்வேர் இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஒ (NSO) எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

banner

Related Stories

Related Stories