பெகாசஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்கிய போது, அரசே குழு அமைத்து விசாரணை நடத்திய பிறகு குழுவின் முடிவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்து தற்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. இது தேசபாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி அமர்வு, குடிமக்களின் தனி உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு அரசின் பதில் என்ன? தேசபாதுகாப்பு தவிர்த்து பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளார்கள் என்ற புகாருக்கான பதில் என்ன? என்று கேள்வி எழுப்பினர்,
நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்தற்கும் தற்போது அரசு தெரிவிப்பதற்கும் முரண்பாடுகள் இருக்கிறது. ஒரு குழு அமைத்து விசாரணை நடத்துவது என்பது இப்போது பிரச்னை இல்லை. அரசு தனது நிலைபாட்டை தெரிவித்து தெளிவாக பதில் தாக்கல் செய்தால்தான் அரசின் நிலைப்பாடு தெரியவரும் என்று நீதிபதிகள் கூறினர்.
அதனையடுத்து பெகாசஸ் என்பது சட்டவிரோத உளவு மென்பொருள். அதனை குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்தியிருப்பது மிக மோசமானது. அது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று அரசு கூற முடியாது என்று என்.ராம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.
மேலும், அரசு உண்மையை முழுமையாக மறைக்க முயல்கிறது. எனவேதான், அரசே குழு அமைத்து விசாரிப்பதாகக் கூறுகிறது. அரசு குழுவை அமைக்கும் முடிவை ஏற்க கூடாது என்று கபில்சிபல் எதிர்ப்பு தெரிவிதார்.
பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பு மட்டுமல்ல, தவறான தகவல்களை குடிமக்களின் தொலைபேசியில் கொண்டு சேர்க்க முடியும். இது ஆபத்தானது. எனவே எந்த வகையிலும் பெகாசஸ் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று மற்ற வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
பெகாசஸ் விவகாரத்தில் அரசு மீது நம்பிக்கை இல்லை. அரசு அமைக்கும் குழுவை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்றமே நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அவரை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், அரசு பதிலளிக்க முன்வராத நிலையில் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பிப்பதைத் தவிற வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.