கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்ய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் சாட்சி ஒருவர் தன்னிடம் வெற்று ஆவணத்தில் கையெழுத்து வாங்கியதாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசு கப்பலில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில், தனியார் புலனாய்வாளர் கேபி கொசாவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட அன்று, அவருடன் கொசாவி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில், தலைமறைவான கொசாவியை புனே போலிஸார் தேடி வருகிறனர்.
இந்தவழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள பிரபாகர் தாக்கல் செய்த அறிக்கையில், “கடந்த 2ஆம் தேதி சொகுசு கப்பலின் வரவேற்பறையில் இருந்தபோது, கப்பலில் உள்ளவர்களை அடையாளம் காட்டும்படி என்னிடம் தெரிவித்தனர். இதற்காக வாட்ஸ்-அப் மூலம் படங்களை அனுப்பினர்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு என்னிடம் வெற்று ஆவணங்களில், கொசாவியும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூத்த அதிகாரி சமீர் வான்கடேவும் கையெழுத்து வாங்கினர். சமீர் வான்கடே மற்றும் கொசாவி இருவரும் கூட்டாகச் சதி செய்துள்ளனர்.
நான் காரில் அமர்ந்திருந்த போது, சாம்டி சூசா என்பவரிடம் ரூ.18 கோடி அளவுக்கு போன் மூலம் கொசாவி பேரம் பேசியதை நான் கேட்டேன். அதில், ரூ.8 கோடி சமீர் வான்கடேவிடம் வழங்கப்பட்டுவிட்டது.
கொசாவியிடம் இருந்து பணம் பெற்று, சாம் டி சூசாவிடம் நானே நேரில் சென்று, டிரிடன்ட் ஓட்டல் அருகேயுள்ள பகுதியில் ஒப்படைத்தேன். அப்போது பணம் எண்ணப்பட்டபோது, அதில் ரூ.38 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. இந்த நிலையில்தான் கொசாவி மாயமாகி உள்ளார். அவருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் கொசாவியும், ஆர்யனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது பதிவாகியுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீது அவர்களின் சாட்சியே லஞ்ச புகார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.