நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பா.ஜ.கவின் திட்டமிட்ட சதி என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் விருந்து நடந்த விவகாரத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிஸார் கைது செய்தனர்.
இதில் ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகிய மூன்று பேரிடம் இருந்து 13 கிராம் கோகைன், 5 கிராம் எம்.டி, 21 கிராம் கஞ்சா, 22 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 33,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதை மறைக்கவே ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான ஆர்யன்கான் உள்ளிட்டோரை அதிகாரிகள் அழைத்துச் செல்லும்போது அவருடன் பா.ஜ.க பிரமுகர்கள் சிலர் இருந்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் அமைச்சருமான நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “ஆர்யன் கானின் கைது போலியானது. இது ஒரு திட்டமிட்ட சதி. கடந்த ஒரு மாதமாக அடுத்த இலக்கு நடிகர் ஷாருக்கான் தான் எனும் தகவல் புலனாய்வு நிருபர்களிடம் பரப்பப்பட்டது.
சொகுசுக் கப்பலிலோ, துறைமுகத்தின் கப்பல் முனையத்திலோ போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. என்.சி.பி வெளியிட்டுள்ள காணொளி, அந்த அமைப்பின் மண்டல அலுவலகத்தில் எடுக்கப்பட்டது. எனவே கப்பலில் போதை மருந்து கைப்பற்றப்பட்டதாக கூறுவது நாடகம்.” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநில அமைச்சரே இந்த சம்பவத்திற்குப் பின்னால் பா.ஜ.கவின் சதி இருப்பதாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.