மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வை மோடி அரசு கட்டாயமாக்கியது பயிற்சி மையங்களை வளர்ப்பதற்குதான் என நாடு முழுவதும் பல தரப்பினராலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தொடர்ச்சியாக அற மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகும் என்று உணராமல் நீட் தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
இப்படி இருக்கையில் அண்மையில் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளது, நிர்வாக முறையில் மருத்துவ சீட்டை முன்பதிவு செய்வது என்பது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது சிபிஐ விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள பயிற்சி மையத்தில் பயின்ற 5 மாணவர்கள் மூலம் ஆள்மாறாட்டம் நடைபெற்றிருப்பதும், அதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஊழல் செய்வதற்காகவும் பணம் ஈட்டுவதற்காக மட்டுமே இந்த நீட் தேர்வை பாஜக அரசு தொடர்ந்து ஆதரித்து நடத்திக் கொண்டிருக்கிறது என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் முறையாக எவ்வித முறைகேடுகளின் இன்று நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும், சிபிஐ விசாரணையில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தி ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தேசிய தேர்வுகள் முகமைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், திடீரென தேர்வு முறையை மாற்றியதால் மாணவர்கள் மத்தியில் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த புதிய தேர்வு முறைய உள்வாங்கிக் கொள்ள சில காலம் தேவைப்படுகிறது எனவும், ஏற்கெனவே நீட் தேர்வால் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.