இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது மோடி அரசு. நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மாணவர்களும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் தெரிவித்தும் பின்வாங்க மறுக்கிறது பா.ஜ.க அரசு.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல இடங்களிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டங்கள் செய்யப்பட்டதும், பல்வேறு மோசடிகள் நடைபெற்றதும் அம்பலமாகின.
இவை மட்டுமல்லாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகள் திட்டமிட்டு, மாணவர் சேர்க்கையில் பெரும் முறைகேட்டிலும் ஈடுபட்டு வருகின்றன. மருத்துவக் கல்லூரிகள் தரகர்களை நியமித்து, பெரும் பணக் கொள்ளையில் ஈடுபட்டது கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் அம்பலமானது.
மருத்துவம் படிக்கும் மாணவர்களை மீண்டும் நீட் தேர்வு எழுதச் செய்து, தேர்ச்சி பெற்றபிறகு குறிப்பிட்ட கல்லூரியில் சீட்டை முன்பதிவு செய்கின்றனர். பின்னர் அந்த இடத்தில் மாணவர் சேராவிட்டால் அந்த இடம் காலியாகும்.
அதற்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும். அப்போதும் அதே சீட்டை உறுதிசெய்துவிட்டு மாணவர்கள் கல்லுரியில் சேராமல் தவிர்த்து விடுகின்றனர். இதற்கு அபராதமும் வசூலிக்கப்படும். இவ்வாறு கலந்தாய்வு காலம் முழுவதும் அந்த இடம் காலியாகவே வைக்கப்படும்.
பின்னர், அந்த இடங்களை கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நிர்வாக ஒதுக்கீட்டில் விற்று விடுகின்றனர். மாணவர்களுக்கு அன்பளிப்பு, மருத்துவ சேர்க்கை அபராதக் கட்டணம் ஆகியவற்றை கல்லூரியே ஏற்றுக்கொண்டு, சீட்டை கோடிக்கணக்கில் விற்று கொள்ளையில் ஈடுபடுகின்றன.
நீட் தேர்வை நடத்துவதில் காட்டும் அக்கறையில் ஓரளவையாவது தேர்வை குளறுபடிகள், முறைகேடுகளின்றி நடத்துவதில் மோடி அரசு காட்டலாம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.