குஜராத் மாநிலத்தின் மெஹ்சானாவில் உள்ள கடோசன் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் சவுத்ரி. அவருக்கு வயது 31. அதேப் பகுதியில் நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த செப்டம்பர் 15ம் தேதியன்று ஜெயில் ரோடு பகுதியில் உள்ள தனியார் க்ளினிக்கில் மாலை நான்கு மணியளில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இரவு 10 மணி வரை அதே க்ளினிக்கில் கண்காணிப்பிற்காக அரவிந்த் தங்க வைக்கப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சையால் எந்தவித விளைவுகளும் ஏற்படாடததால் அரவிந்த் சவுத்ரியை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவரும் இரவு உணவு சாப்பிட்டு தூங்கியிருக்கிறார். பின்னர் செப்டம்பர் 17ம் தேதியன்று அரவிந்திற்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து முடிமாற்று அறுவை சிகிச்சை நடந்த க்ளினிக்கிற்கே சென்று பரிசோதித்திருக்கிறார்.
அப்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடல் நிலை மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இப்படி இருக்கையில் கடந்த 18ம் தேதி காலையில் அரவிந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
இதனையறிந்த அரவிந்த் சவுத்ரியின் குடும்பத்தார், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
உயிரிழந்த அரவிந்த் சவுத்ரியின் உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்த பிறகே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மருத்துவரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளது என்றும் மெஹ்சானா பகுதி காவல் ஆய்வாளர் பி.எம்.படேல் தெரிவித்திருக்கிறார்.