மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2018ம் ஆண்டு காணாமல் போனர். இது குறித்து சிறுமியின் பெற்றார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து கடந்த ஜூலையில் அந்த சிறுமி கண்டறியப்பட்டார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், மன்டாசூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் தனக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து என்னை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர் தன்னை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதால் குழந்தை ஒன்றைப் பெற்றதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபரை போலிஸார் கைது செய்து போக்ஸோ வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்குமாறு அந்த வாலிபர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அந்த சிறுமி பெற்றோருக்குத் தெரியாமல் வாலிபருடன் சென்றுள்ளார்.
எனவே இவர் சிறுமியைக் கடத்தியதாகச் சொல்ல முடியாது. அதுமட்டுமல்லாது அந்த வாலிபருடன் தொடர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றெடுத்துள்ளார்" என கூறி குற்றவாளிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பெண் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதியின் சர்ச்சையான கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.