கொரோனா நெருக்கடி இன்னும் இந்தியாவில் தீராத வேளையிலும் கூட பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு உயர்த்தி வருவதால் இது மக்களுக்கு இன்னும் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தியதால் ரூ.875க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதால் 900 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 ரூபாய் வரை சிலிண்டர் விலையை ஒன்றிய பா.ஜ.க அரசு உயர்த்தியுள்ளது. இதுபோக, சிலிண்டர் மீதான விலையை ஒவ்வொரு மாதமும் உயர்த்துவதன் மூலம் மானியத்தை முற்றிலுமாக ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் ஒன்றிய பாஜக அரசை சாடியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், பிரதமரே நாட்டில் இரண்டு வகையான வளர்ச்சி மட்டுமே உங்கள் ஆட்சியில் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஒன்று உங்களது கோடீஸ்வர நண்பர்களின் வருமானம், மற்றொன்று சாமானிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி.
இதுதான் உங்களுக்கு வளர்ச்சி என்று பொருள்பட்டால் அந்த வளர்ச்சியை விடுப்பில் அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.