பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம் ஒன்றிய அரசு 23 லட்சம் கோடி ரூ லாபம் சந்தித்துள்ளது. இந்த பணம் எங்கே செல்கிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதுடன் விலைவாசி உயர்வு, கட்டண உயர்வுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்து விலகிய போது 2014 ல் டெல்லியில் 410 ரூ இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 885 ரூபாயாக உயர்ந்துள்ளது.
71 ரூபாயாக இருந்த பெட்ரோல் 101 ரூபாயாகவும், 57 ரூ டீசல் 88 ரூபாயகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் 105 டாலராக இருந்த கச்சா எண்ணெய் 71 டாலராகவும், இயற்கை எரிவாயு 880 டாலரிலிருந்து 653 டாலராகவும் குறைந்துள்ளது.
ஆனால், விலையை அரசு உயர்த்திக் கொண்டே செல்கிறது. அரசு மக்களிடமிருந்து இந்த விலை உயர்வு மூலம் சம்பாதித்த 23 லட்சம் கோடியை பிரதமரின் நண்பர்களுக்காக தாரை வார்த்து வருகிறார். பணமதிப்பு மூலம் சாதாரண மக்களும், சிறு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டனர். இன்று தனியார் மயம் மூலம் பிரதமரின் ஒரு சில நண்பர்கள் லாபமடைந்து வருகின்றனர் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.