பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் விளம்பரத்திற்காக தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கருத்துகளைப் பேசி வருகின்றனர். அறிவியலுக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத வகையில் பா.ஜ.கவினர் கருத்துகளைப் பேசுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், "மேற்கு வங்கத்தில் மாடுகளை வீடுகளில் சரியாக வைத்து வளர்ப்பதில்லை. காரணம், மாடுகளை வீட்டில் வைத்திருப்பதன் முக்கியத்துவம் மக்களுக்கு புரியவில்லை.
இன்றைக்கு எல்லோரும் பாக்கெட் பால் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். அது உண்மையான பால் கிடையாது. பசுவின் பாலில் தங்கம் இருக்கிறது என நான் சொன்னபோது, அனைவருமே என்னை கேலி செய்தனர். உண்மையான பாலை சாப்பிடாதவர்களால், பசும்பாலில் உள்ள தங்கத்தின் மதிப்பை புரிந்துகொள்ளமுடியாது” எனப் பேசியுள்ளார் திலீப் கோஷ்.
திலீப் கோஷ் கடந்த 2019-ஆம் ஆண்டிலும் இதே கருத்தைக் கூறியிருந்தார். அப்போது, “இந்தியாவில் உள்ள பசுமாடுகள் தரும் பாலில் தங்கம் உள்ளது. அதனால்தான், பாலில் மஞ்சள் நிறம் உள்ளது.
ஆனால், வெளிநாட்டு மாடுகளின் பாலில் தங்கம் இல்லை. வெளிநாட்டு மாடுகளுக்கு திமில்கள் கிடையாது. இந்திய பசு மாடுகளின் திமிலில், உள்ள சுரப்பி சூரிய ஒளி படும்போது தங்கத்தை உற்பத்தி செய்கிறது. அந்தப் பாலை குடித்தால்தான் மனிதர்கள் உயிர்வாழ முடியும்” எனக் கூறினார்.
திலிப் கோஷின் பேச்சை உண்மை என்று நம்பிய ஒருவர், தன்னுடைய 2 பசுக்களையும் தனியார் நிதி நிறுவனத்திற்கு அழைத்து வந்து, மாடுகளை அடமானமாக பெற்றுக்கொண்டு எவ்வளவு தங்க கடன் கொடுப்பீர்கள்?” என்று கேட்ட ஆச்சரிய சம்பவமும் நடந்தது.
பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் மீண்டும் மீண்டும் பொய்யான கருத்தைப் பேசி வருவது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.