திருவண்ணாமலையில் அரிய வகை வலம்புரி சங்கு எனக் கூறி தொழிலதிபர்களைக் குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை தாலுகா காவல் ஆய்வாளர் ஹேமமாலினி மற்றும் போலிஸார், தொழிலதிபர்கள் எனக் கூறி அந்த மோசடி கும்பலைச் சந்தித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் போலியான சங்கை காட்டி இது 500 ஆண்டுகள் பழமையான சங்கு. இதை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்தால் கோடீஸ்வரர் ஆவீர்கள் எனக் கூறியுள்ளனர். மேலும் அந்த சங்கில் பாலை ஊற்றி தயிராக மாற்றியும் காட்டியுள்ளனர்.
இதையடுத்து பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்திருந்த அரிசியின் கீழ் வலம்புரிச் சங்கை வைத்தனர். அது அரிசியின் மேல் நோக்கி வந்தது. இப்படி இந்த மோசடி கும்பல் வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்துள்ளது.
அப்போது, மறைவாக இருந்த போலிஸார் அந்த கும்பலை சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதில் கோவிந்தராஜ், உமாசங்கர் உள்ளிட்ட 7 பேரை போலிஸார் கைது செய்தனர். இதில் உமாசங்கர் என்பவர் பா.ஜ.க-வில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளராக உள்ளார்.
பின்னர் போலிஸார் இந்த கும்பலிடமிருந்த போலி வலம்புரிச் சங்கு, கார், இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலிடம் யாராவது ஏமாந்துள்ளார்களா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.