மத்திய பிரதேச மாநிலம், அம்லாதாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகித். இவர் வீதி வீதியாக இருசக்கர வாகனத்தில் சென்று பிஸ்கெட் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், ஜாகித் போர்லி கிராமத்தில் பிஸ்கெட் விற்பனை செய்து முடித்த விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு நபர்கள் அவரிடம் 'ஆதார் அட்டையைக் காட்டு, அடையாள அட்டையைக் காட்டு' எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது அவர், ‘ஆதார் அட்டை என்னிடம் இல்லை' என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் இஸ்லாமியராம ஜாகித்தை பயங்கரமாக அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவர்கள் 'இனி போர்லி கிராமத்திற்கு வந்தால் அவ்வளவுதான்' என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஜாகித் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் சமீபத்தில்தான் வளையல் விற்கும் இஸ்லாமிய வாலிபரைக் கும்பலாகச் சேர்ந்து பலர் தாக்கினர்.
இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு இஸ்லாமிய வியாபாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.