மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் இந்துக்கள் அதிகம் உள்ள பகுதியில் வளையல் விற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர் அந்த இளைஞர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த வளையல்களை உடைத்துச் சேதப்படுத்தினர். இஸ்லாமியர் வைத்திருந்த பணம் ரூ.10 ஆயிரத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் இஸ்லாமிய இளைஞரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த இஸ்லாமிய இளைஞரின் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினர். பின்னர் போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அம்மாநில பா.ஜ.க அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இந்து பெயரை பயன்படுத்தி அவர் வளையல் விற்பனை செய்ததால்தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அலட்சியமாக பதில் அளித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகின்றன. அதுவும் குறிப்பாக குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.