ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக இருப்பவர் நாராயணசாமி. இவர் கர்நாடகாவில் கடந்த 19ம் தேதி பா.ஜ.வினர் நடத்தும் ஆசீர்வாத யாத்திரையில் பங்கேற்றார்.
இதையடுத்து கடக் மாவட்டத்தில் உயிர்நீத்த ராணுவ வீரரின் வீட்டிற்குச் செல்ல ஒன்றிய அமைச்சர் முடிவு செய்திருந்தார். இதன்படி அவரின் வீட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக வேறு ஒரு ராணுவ வீரரான ரவிக்குமார் கட்டிமணி என்பவர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
மேலும், அவரது குடும்பத்தினருக்குத் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். இதனால் ரவிக்குமாரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தான் முகவரி மாறி வந்தது அமைச்சருக்குத் தெரியவந்துள்ளது. பின்னர் இராணுவ வீரரின் சேவையைப் பாராட்டிவிட்டு அங்கிருந்து சங்கடமான முகத்துடன் வெளியேறினார்.
இதுகுறித்து ராணுவ வீரரின் மனைவி கூறுகையில், "எங்களுக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. எனது கணவர் காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். திடீரென வீட்டிற்கு வந்த ஒன்றிய அமைச்சர் இரங்கல் தெரிவித்தால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் தான் அது வேறு ஒருவர் என்பது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.