உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணைய இணையதளத்தை ஹேக் செய்து 10,000 போலி வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விபுல் சைனி (24). இவர் உள்ளூரில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம் போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து கொடுத்ததை உளவுத்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து விபுல் சைனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள், நிபுணர்கள் நேற்று விபுல் சைனியின் வீடு, அலுவலகத்துக்குச் சென்று அவர் பயன்படுத்திய கணினி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் கைப்பற்றினர்.
மேலும், சைனியின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், அதில் 60 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது.
இதுகுறித்து போலிஸார் கூறும்போது, ‘‘கடந்த 3 மாதங்களாக விபுல் சைனி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை ஹேக் செய்து 10,000-க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்துக் கொடுத்துள்ளார். ஒரு வாக்காளர் அட்டைக்கு பொதுமக்களிடம் ரூ.200 வரை பணம் பெற்றுள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த அர்மான் மாலிக் என்பவரின் தூண்டுதலின்பேரில் போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்ததாக விபுல் சைனி வாக்குமூலம் அளித்துள்ளார். அர்மான் மாலிக்கை தீவிரமாக தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
உ.பி.யில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் ஆணைய இணையதளத்தை ஹேக் செய்து 10,000 போலி வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த மோசடிக்கு பின்னணியில் "மாநில பாதுகாப்பு" கிடைக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.