இஸ்ரேல் நாட்டிலுள்ள தனியார் நிறுவனமான NSO என்பதனிடமிருந்து பெற்ற பெகாசஸ் என்ற உளவு செயலியைப் பயன்படுத்தி இந்தியாவில் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள பல்வேறு நபர்களின் தொலைபேசிகளை ஊடுருவி உளவு பார்த்திருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி நாட்டை அதிரவைத்துள்ளன.
யாருடைய தொலைபேசிகளெல்லாம் ஊடுருவத் தேர்ந்தெடுக்கப்பட்டன என்ற பட்டியல் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், அனைத்தும் ஊடுருவப்பட்டன என்று தடயவியல் சார்ந்து இன்னம் நிரூபணம் ஆகவில்லை என்றாலும் கணிசமானவர்களது தொலைபேசிகளை ஆராய்ந்து பெகாசஸ் ஊடுருவியிருப்பதை உறுதி செய்துள்ளது, இதனை ஆராய்ந்த சர்வதேச ஊடக, தன்னார்வலர் கூட்டமைப்பு.
இஸ்ரேலிய நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசுகளுக்கு மட்டுமே இந்த பெகாசஸை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்திய அரசுதான் இதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசி உட்பட பலரது தொலைபேசிகளிலும் புகுந்து வேவு பார்த்துள்ளது என்று எண்ண வேண்டியுள்ளது. ஆனால் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் ஒற்றை வரி மறுப்பை தவிர இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க மறுப்பதால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எனப் பலரின் தொலைபேசிகளும் உளவு பார்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுவது பல திகிலூட்டும் ஐயங்களுக்கு இடமளிக்கிறது. பொதுமன்றத்தில், ஊடகங்களில் தொடர்ந்து விவாதிக்கப்படும் இந்த பெகாசஸ் பிரச்சினை குறித்து உள்துறை அமைச்சரோ, பிரதமரோ விளக்கமளிக்க மறுப்பதை எப்படி புரிந்துகொள்வது என்ற கேள்வி எழுகிறது. தடயவியல் புலனாய்வில் பெகாசஸ் செயலி பயன்படுத்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட செல்பேசிகளில் ஒன்று தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரின் செல்பேசி. தமிழகத்தில் தி.மு.க-வுக்கு மட்டுமன்றி, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தோற்கடிக்க கடுமையாக முயற்சி செய்த மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கும் அவர்தான் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் எண்களையெல்லாம் வேவு பார்க்க சொன்ன NSO Group வாடிக்கையாளர்தான் பாகிஸ்தான் எண்கள் பலவற்றையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எண்ணையும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுவது அந்த வாடிக்கையாளர் இந்திய அரசின் உளவு அமைப்புகள்தான் என்று யூகிக்க இடமளிக்கிறது. இந்த பிரச்சினை மக்களாட்சிக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என்றால் மிகையாகாது. அது என்னவென்று பரிசீலிப்போம்.
அரசு, அரசாங்கம், ஆட்சி
அரசு என்பது ஆங்கிலத்தில் State என்ற வார்த்தைக்கு இணையானது; அரசாங்கம் என்பது ஆட்சி புரியும் செயலைக் குறிப்பது என்பதால் Government என்ற சொல்லுக்கு இணையானது. ஆட்சி என்பதை Rule என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாகக் கொள்ளலாம். பல சமயங்களில் இவை இடம் மாற்றி பயன்படுத்தப்பட்டாலும் ஒவ்வொன்றுக்கும் இடையே ஆழமான வித்தியாசங்கள் உள்ளன.
அரசு என்பது அருவமானது. அது ஒவ்வொரு குடிநபரும் பெற்றுள்ள சுதந்திரத்தின், இறையாண்மையின் கூட்டு வடிவம் என்றுதான் மக்களாட்சியில் பொருள் தரும். தனி நபராக நாம் அரசின் பகுதியோ இல்லையோ, Citizen என்று ஆங்கிலத்தில் கூறும் குடிநபராக நாம் அரசின் பங்குதாரர்கள். இதுதான் கருத்தியல் வடிவம். அதனால்தான் அரசு அதிகாரிகள் எல்லோரும் Service எனப்படும் சேவையில் அல்லது பணியில் இருக்கிறார்கள் என்கிறோம். அவர்களுடைய அதிகாரம் குடிநபர்கள் வழங்கிய அதிகாரம்தான். அதனால் அவர்கள் ஆண்டைகள் கிடையாது. சேவகர்கள், பணியாளர்கள்தான். அதேபோல அரசியல்வாதிகளும் தேர்தலில் உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளியுங்கள் என்றுதான் கேட்க முடியுமே தவிர, உங்களை ஆள்வதற்கு வாய்ப்பளியுங்கள் என்று கேட்க முடியாது. ஆனால், ஒரு கட்சியாக வெற்றிபெறும்போது அந்த கட்சி ஆளும்கட்சி என்று கூறிக்கொள்ளலாம்.
அப்படியான மக்களாட்சி நடைமுறையில் என்ன நடக்கிறது என்றால் அதிகாரம் என்பது பலரிடமும் பிரிந்து இருக்கிறது. செல்வந்தர்களிடம் ஓர் அதிகாரம் இருக்கிறது. அவர்கள் பணத்தின் மூலம் பலரையும் இயக்க முடியும். கருத்துகளை, எண்ணங்களை, கற்பனைகளை உருவாக்குபவர்களிடம் ஓர் அதிகாரம் இருக்கிறது. அவர்களால் மக்களை ஒரு குறிப்பிட்ட வகையில் செயல்படத் தூண்ட முடியும். இதைத்தவிர உடல் வலிமை, ஆயுதம் அவற்றைக்கொண்டும் அச்சுறுத்தி காரியங்களை நிகழ்த்தலாம் என்பதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், மாஃபியா கும்பல்கள், தாதாக்கள் ஆகியோரிடமும் சட்டத்துக்குப் புறம்பான அதிகாரம் இருக்கிறது.
ஆனால், இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் இருந்தால்தான் அது சமூக ஒழுங்கைக் காக்க முடியும் என்பதால் அரசிடம் காவல்துறை, ராணுவம் போன்றவை இருக்கின்றன. சட்டத்தின் அனுமதியுடன் வன்முறையைப் பயன்படுத்தும் உரிமை அரசுக்கு இருக்கிறது. அடுத்தபடி நாட்டின் பொதுச்சொத்துகள் அனைத்தும் அரசுக்கே உரியது என்பதால் அரசே ஆகப்பெரிய செல்வக்குவிப்பினை கொண்டதாக இருக்கிறது. உதாரணமாக ஒருவரது நிலத்துக்கு அடியில் தங்கப்பாளங்கள் இருக்கின்றன என்றால் அது அரசுக்குத்தான் சொந்தம். எல்லா இயற்கை வளங்களும் அரசுக்குத்தான் சொந்தம். மேலும் அரசு அந்நிய நாடுகள் ஆக்கிரமிக்காமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதாலும் அதனிடம் ராணுவ பலம், ஆயுத பலம் குவிக்கப்படுகிறது. அரசு மிகப்பெரிய நிர்வாக இயந்திரத்தைக் கொண்டுள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் அரசுக்காகப் பணி செய்கிறார்கள். அரசு அவர்கள் மூலமாக எல்லா தகவல்களையும் திரட்டுகிறது. அதனால் அரசிடமே தகவல் அறிவும் வேறு யாரையும் விட அதிகமாகக் குவிந்துள்ளது.
இத்தகைய சர்வ வல்லமை வாய்ந்த அரசில் எல்லா குடிமக்களும் பங்குதாரர்கள் என்றாலும் எல்லோரும் சேர்ந்து ஆட்சி செய்ய முடியாது என்பதால் அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை ஆட்சி செய்யத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தப் பிரதிநிதிகள் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எந்தக் கட்சியின் சார்பாக அதிக பிரதிநிதிகள் வெல்கிறார்களோ அந்தக் கட்சியின் தலைவரே ஆட்சியையும் தலைமையேற்று நடத்துவார்.
இதன் விளைவாக என்ன நடக்கிறது என்றால் சர்வ வல்லமை படைத்த அரசு என்பது அடிப்படையில் அதிகாரிகள், காவல்துறை, ராணுவம் என்ற நிலையான ஊழியர்களால் செயல்படுகிறது. அவர்களைக் கட்டுப்படுத்துபவர்களாக மக்கள் தேர்ந்தெடுக்கும் கட்சி பிரதிநிதிகள், அந்த கட்சியின் தலைவர் அமைகிறார். அரசிடம் குவிக்கப்பட்ட அதிகாரம் முழுவதும் அவர் கைகளுக்கு வருகிறது. தலைவர் என்ற தனிநபரிடம் அதிகாரம் குவிகிறது. இந்த நிகழ்வை வெகுஜன இறையாண்மை (Popular Sovereignty) என்கிறோம்.
அரசாள்பவர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
அப்படியானால் அதிகாரம் எல்லாம் மீண்டும் ஒரு நபரிடம் குவிந்துவிடுமா என்றால் மக்களாட்சி அமைப்பின் லட்சிய வடிவத்தில் அப்படியில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அது சட்டத்துக்குட்பட்டுதான் ஆட்சி செய்ய வேண்டும். சட்டங்கள் தொகுக்கப்பட்டு அரசியல் நிர்ணய சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு உட்பட்டு பலவிதமான சட்டத் தொகுப்புகள் உள்ளன. இந்த ஆட்சியும், ஆட்சி செய்யும் அரசியல் தலைவரும், அரசு அதிகாரியும் சட்டத்தை மீற முடியாது. அதனால் உண்மையில் ஆட்சி செய்வது சட்டம்தான். அதைத்தான் நீதிபரிபாலன இறையாண்மை (Juridical Sovereignty) என்று சொல்கிறோம்.
ஒரு சாதாரண குடிமகன்கூட அரசாள்பவர்கள் தவறு செய்தால் வழக்கு போடலாம். தன் கன்றை இளவரசன் தேரேற்றி கொன்றதால், அரண்மனை வாசலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியின் கயிற்றை இழுத்து ஒலிக்க செய்த பசுவைப் போல நீதிக்காக யாரும் முறையிடலாம். ஆனால் முந்தைய காலத்தில் அரசர்களே நீதிபதிகளாகவும் இருப்பதால் சில சமயம் தேரா மன்னர்களாகவும் இருந்துவிடுவார்கள். அதனால் இன்றைய மக்களாட்சியில் நீதிமன்றங்கள் தனியாக, சுயேச்சையாக இயங்குபவை. அரசால் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது. அரசிடம் குவிந்துள்ள அதிகாரத்தை நெறிப்படுத்தும், கட்டுப்படுத்தும் பணியை செய்வதில் நீதிமன்றம் முதன்மையானது.
அதற்கு அடுத்த இடம் பொதுமன்றத்துக்குத்தான். இதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. ஊடகங்கள் மக்களிடையே உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களிடையே கருத்துகளை உருவாக்கும் என்பதால் அரசு தவறு செய்தால் அவை மக்களிடம் கூறிவிடும். ஆள்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அதனால் ஊடகங்களை நான்காவது தூண் என்பார்கள். இத்தகைய ஆற்றல் மிக்க ஊடகமும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயேச்சையாக, சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம்.
உளவு பார்க்கும் உரிமை அரசுக்கு உள்ளதா?
அரசு எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதாலும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதாலும் உளவுத்துறை என்பதை ஏற்படுத்தி அந்நிய சக்திகள், குற்றச்செயல் புரிபவர்கள், தீவிரவாதிகள் ஆகியவர்களை உளவு பார்ப்பதற்கு உரிமை பெற்றுள்ளது. அதற்காக பல்வேறு உளவு அமைப்புகளை உருவாக்குகிறது. உளவு பார்ப்பதைப் பகிரங்கமாகச் செய்ய முடியாது என்பதால் அதை ரகசியமாகச் செய்யும் உரிமையும் அரசுக்கு இருக்கிறது. ஆனால், அந்த உரிமையை நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது.
அப்படி சர்வ வல்லமை படைத்த அரசை ஓர் அரசியல் கட்சி தேர்தலில் வென்று கட்டுப்படுத்தும்போது அந்தக் கட்சியிடம் பெரியதொரு அதிகாரம் குவிகிறது. அதைப் பயன்படுத்தி அது எதிர்க்கட்சிகளை, நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை உளவு பார்த்தால் அது எவ்வளவு பெரிய அநீதி? ஓர் அரசியல் கட்சி நிரந்தரமாக தன்னையே அரசாக மாற்றிக்கொள்ள நினைத்து அரசின் அதிகாரங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவது வேலியே பயிரை மேய்வது ஆகாதா?
அத்தகைய அடிப்படையான ஓர் அத்துமீறல்தான் பெகாசஸ் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசால் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் எதிர்க்கட்சிகள் கொந்தளித்து நாடாளுமன்றத்தை முடக்குகின்றன. பத்திரிகையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். ஜார்க்கண்டில் ஒரு நீதிபதியின் மேல் யாரோ வாகனத்தை ஏற்றிக் கொன்றுள்ளார்கள். இதைத் தொடர்ந்து நீதிபதிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே கூறியுள்ளார்.
காப்பாற்றப்படுமா மக்களாட்சி?
சற்றேறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு முன்னால், அமெரிக்க அதிபர் நிக்ஸன் எதிர்க்கட்சி அலுவலகத்தினுள் ஆட்களை அனுப்பி தொலைபேசிகளில் ஒட்டுக்கேட்கும் கருவிகளைப் பொருத்தச் செய்தார். அந்தக் கருவிகளைப் பழுதுபார்க்க அவர்கள் மீண்டும் சென்றபோது காவல்துறையிடம் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் அதிபரால் உளவுக் கருவி பொருத்த அனுப்பப்பட்டவர்கள் என்று தெரிந்தது. நிக்ஸன் அது குறித்த விசாரணையில் உண்மை வெளிவராமல் இருக்க பல முயற்சிகளைச் செய்தார். இறுதியில் அவையெல்லாம் சேர்ந்து அம்பலமானது. அதனால் அவர்மீது குற்றம் சுமத்தி பதவி நீக்கம் செய்ய அமெரிக்க செனட் முன்வந்தது. வேறு வழியில்லாமல் நிக்ஸன் ராஜினாமா செய்தார். வாட்டர்கேட் விவகாரம் என்று வரலாற்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வு மக்களாட்சி என்பது எவ்வளவு பலவீனமானது என்பதையும், அதைக் காப்பாற்ற ஊடகங்களும், மக்களும் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியது.
பெகாசஸ் விவகாரம் வாட்டர்கேட் விவகாரத்தைவிட பிரமாண்டமானது. இந்தச் செயலியை யாருடைய செல்பேசிக்கும், கணினிக்கும் யாருக்கும் தெரியாமல் அனுப்பி புகுத்திவிட முடியும். அது அந்தக் கருவிகளிலுள்ள மைக், கேமராக்களையும் இயக்கி உளவு பார்க்க துவங்கிவிடும். அத்தகைய செயலியைப் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர், முக்கியமான தேர்தலில் எதிர்க்கட்சியின் தேர்தல் ஆலோசகர் ஆகியோருடைய செல்பேசிகளில் செலுத்தி கண்காணிப்பதென்பது எவ்வளவு பயங்கரமான அத்துமீறல் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. இது நடந்திருப்பது உண்மையானால் மக்களாட்சியை எப்படிக் காப்பாற்ற முடியும் என்பதே கேள்விக்குறிதான். ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியும், உள்துறை அமைச்சரும், பிரதமரும் இந்தப் பிரச்சினையை அலட்சியப்படுத்துவது விபரீதமானது, கண்டனத்திற்குரியது. அவர்கள் உளவு பார்க்கவில்லையென்றால் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு யார் உளவு பார்க்க முயன்றது என்பதைக் கண்டறிய வேண்டாமா? பிற நாட்டின் அரசாங்கங்கள் அதைச் செய்திருக்கும்போது ஏன் பா.ஜ.க அரசு அதைச்செய்ய மறுக்கிறது என்பதே நம்முன் உள்ள பிரமாண்டமான கேள்வியாக உள்ளது.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி.
நன்றி: மின்னம்பலம்