முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் வருமாறு:-
நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சைக்கிளில் வந்தார்கள். உடனே பிரதமர் சொல்கிறார்: ‘நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார்கள் எதிர்க்கட்சிகள்” என்று! நாடாளுமன்றத்தில் நாட்டை உலுக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தாமல் தப்பித்துக் கொண்டு இருப்பதுதானே நாடாளுமன்றத்தின் ஒரே வேலை. அதைக்கூட ஒழுங்காகச் செய்யாத அவர்கள்தானே நாடாளுமன்றத்தை அவமானப்படுத்துபவர்கள்!
இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என்று தேர்ந்தெடுத்து அவர்களது தொலைபேசி எண்கள், அந்நிய நாட்டு நிறுவனத்தின் துணையோடு ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. அப்படி ஒட்டுக் கேட்டது யார் என்பதை அறியும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இல்லையா? இந்த நாடாளுமன்றத்துக்கு இல்லையா? அது குறித்து திறந்த விவாதம் வேண்டாமா? யார் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களோ, அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்பதைக் கூட ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். நான் இல்லை என்றால், வேறு யார் என்பதை அறியும் உரிமையாவது நாடாளுமன்றத்துக்கு உண்டுதானே?
அந்த உரிமையை மறுப்பதால்தானே எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் விவாதம் நடத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே ஒரு கோரிக்கை. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னால் நாடாளுமன்றத்தில் பெகாசஸ் இடி இடித்தது. விவாதம் நடக்கும் இடமான நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க வேண்டும் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள். விவாதம் நடத்த முடியாது என்கிறது ஆளும் பா.ஜ.க.! அப்படியானால் நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் முடக்கி வைத்திருப்பது யார்? ஆளும் பா.ஜ.க. தானே!
“நாடாளுமன்ற அலுவல்களில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கான பொறுப்பு அரசிடமே இருக்கிறது. பெகாசஸ் விவகாரத்தில் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் பிடிவாதத்துடனும், ஆணவத்துடனும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தும் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். பெகாசஸ் பிரச்சினை தேசியப் பாதுகாப்பு சார்ந்தது என்பதால் உள்துறை அமைச்சர் பதிலளிக்கும் வகையில் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும்” - என்று 14 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதில் யாரையும் அவர்கள் குற்றம் சாட்டவில்லை. நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரையும் அவர்கள் குறை சொல்லவில்லை. சந்தேக வார்த்தைகள் இல்லை. “விவாதம் நடத்துங்கள், உள்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்” என்பதுதான் கோரிக்கை.
மிகச் சாதாரணக் கோரிக்கைதான். இந்தக் கோரிக்கை; நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காக்கும் கோரிக்கையாக மட்டுமல்ல; இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் கோரிக்கையாகவும் உள்ளது. இந்தியப் பிரமுகர்களை ஒட்டுக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம். இது இந்தியாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்க வில்லையா? ஏன் இந்த நாட்டின் தேசபக்தர்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லை? அவர்களது ரத்தம்தானே முதலில் கொதித்திருக்க வேண்டும்?
இதில் அந்நியக் கைக்கூலி என்ற பட்டத்தை சுமக்கத் தகுதி வாய்ந்தவர்கள் யார்? ஏன் விவாதம் நடத்த அஞ்சுகிறீர்கள்? இந்த அச்சத்துக்குப் பின்னால் இருக்கும் கடந்த கால நடப்புகள் என்ன? என்பதுதான் மக்கள் மன்றம் எழுப்பும் கேள்வி. இதுமட்டுமல்ல; மூன்று வேளாண் சட்டங்கள், ஏறிக் கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை, கொரோனா மரணங்கள் - இவை எது குறித்தும் நாடாளுமன்றத்தில் தனித்த விவாதங்கள், சிறப்பு விவாதங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
அதனால் அவர்கள் வீதியில் போராடுகிறார்கள். அதனைச் சாதகமாகப்பயன்படுத்திக் கொண்டு சில சட்டமசோதாக்களை சந்தடி சாக்கில் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆர்.ஜே.டி., சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆர்.எஸ்.பி., கேரள காங்கிரஸ் (மானி), லோக் ஜனதா தள் உள்ளிட்ட 17 எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, “உங்கள் அனைவரையும் அழைத்ததற்கான ஒரே நோக்கம், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே. மேலும் மேலும் நமது ஒன்றுபட்ட குரல்கள், மேலும் மேலும் சக்தி வாய்ந்ததாக மாற வேண்டியுள்ளது” என்று சொல்லி இருக்கிறார். பிரிந்து செயல்பட்ட பல கட்சிகளை ஒன்று சேர வைத்துள்ளது பா.ஜ.க.! இதுவும் நன்மைக்கே!
எந்த ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதற்காக ஒட்டுக் கேட்கப்பட்டதோ - அந்த ஒற்றுமை - பட்டவர்த்தனமாக நாடாளுமன்றத்திலேயே உருவாகிவிட்டது! இனி இதில் ஒட்டுக் கேட்க என்ன இருக்கிறது?!