முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் வருமாறு:-
இது தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான நூற்றாண்டு விழா அல்ல, தி.மு.க. அரசு வரலாற்றைத் திரிக்கிறது' என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். அவரது வரலாற்று அறிவை இந்த நாடு அறியும். இப்போது இருப்பது அ.தி.மு.க.வே இல்லை, அந்தக் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரே இல்லை, அங்கு பதவியில் இருக்கும் இரட்டையர்களது பதவிகள் கட்சி சட்டத்திட்டத்தின்படி செல்லாத பதவிகள் என்பதெல்லாம் ஜெயக்குமார் போன்ற புத்திசாலிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொன்னால், இந்த சட்டமன்றத்துக்குள் நுழைவதற்கு மக்களால் தடை செய்யப்பட்ட ஜெயக்குமார், சட்டமன்ற வரலாற்றைப் பேசுவது அபத்தமானது!
கொஞ்சமாவது ‘அண்ணா' பற்றி தெரிந்திருந்தால் ஜெயக்குமாருக்கு சட்டமன்ற வரலாறு தெரிந்திருக்கும். நீதிக்கட்சியைப் பற்றி அண்ணா சொன்னதும், நீதிக்கட்சி ஆட்சியைப் பற்றி அண்ணா சொன்னதும், வெள்ளுடை வேந்தர் தியாகராயர் குறித்து அண்ணா சொன்னதும், ஜெயக்குமார் அறியமாட்டார். அ.தி.மு.க.வில் எவரும் அறியமாட்டார்கள். அவர்களுக்கு எம்.ஜி.ஆரின் தொப்பி தெரியும். ஜெயலலிதாவின் கால் தெரியும். அவ்வளவு தான்!
நூற்றாண்டு விழாவும், முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு விழாவும் நடந்த இந்த மண்டபம்தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்த கோட்டை ஆகும். 1600 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக ஆட்சி செய்த போதும் தலைமைப் பீடமாக இந்த சென்னைக் கோட்டை தான் இருந்தது.
பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமைப் பீடமாகவும் இருந்தது. அதன் பிறகு தான், ஆட்சித் தலைமை என்பது, கல்கத்தாவுக்கு மாறியது. அதன் பிறகுதான் டெல்லிக்கு மாறியது. எனவே தமிழ்நாடு வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றின் மிக முக்கியமான கோட்டை, சென்னையில் இருக்கும் இந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டை.
1919 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம்தான், இந்தியர்களுக்கு பொறுப்பான ஆட்சி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதையும் - ஆட்சியில் இந்தியர்க்கு பங்கு தர வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு இருந்தது. இதன்படி 1920 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் நடந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை 127. இதில் 29 பேரை அரசு நியமனம் செய்யும். மீதமுள்ள 98 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 63 இடங்களைப் பெற்று நீதிக்கட்சி சென்னை ராஜதானியில் ஆட்சியில் அமர்ந்தது. இந்த சட்டமன்றம்தான் இந்தியாவில் உள்ள அனைத்துச் சட்டமன்றங்களுக்கும் வழி காட்டியாக அமைந்த சட்டமன்றம் ஆகும்.
“நாட்டிலுள்ள எல்லா மாநிலச் சட்டமன்றங்களிலும் சென்னை மன்றம்தான் சிறந்த முறையில் நடைபெறுகிறது என்று எல்லோராலும் புகழப்பெற்றது. அதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பெருமக்களில் பலர், தில்லி பாராளுமன்றத்தைப் பார்வையிட்ட பின், சென்னை மன்றத்தைப் பார்வையிட வருவது வழக்கம்” - என்று அன்றைய நீதிக்கட்சித் தலைவரும், சென்னை மாகாண பிரிமியராக (முதலமைச்சருக்கு அன்றைய பெயர்) சிலகாலம் இருந்தவருமான சர்.பி.டி.இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (இன்றைய நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராசனின் தாத்தா! )
“சென்னை சட்டமன்றம், சிறு பாராளுமன்றம் போன்றே நடைபெற்றது. நான் முதல் சட்டமன்றத்தில் கழித்த நாட்களே என்னுடைய பொதுவாழ்வில் சிறந்த நாட்கள்” என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய வரலாற்றுப் பெருமை, அன்றைய சென்னை மாகாணச் சட்டமன்றத்துக்கு உண்டு. அந்தப்பெருமைகள் அ.தி.மு.க.வினருக்குத் தெரியாது. அவர்களது அரசியல் பிழைப்புக்கு இது அவசியமும் இல்லை. வரலாற்றை அடியொற்றிச் செல்பவர்களே வரலாற்றில் நிற்பார்கள், நிலைப்பார்கள்.
அ.தி.மு.க.வின் வரலாறு என்பது ஒருவரின் தனிமனித வெறுப்பால் முளைத்தது. இன்னொருவரின் தன் முனைப்பால் வளர்ந்தது. இன்று இருவரின் அடிமைச் சேவகத்தால் பிழைப்பது. இது மட்டுமே அ.தி.மு.க.வின் வரலாறு! அதனால் அவர்களுக்கு சட்டமன்ற வரலாறும் தெரியாது. மாண்பும் புரியாது.
“1921ல் முதல் சட்டமன்றமானது அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் பகுதிகளையும் உள்ளடக்கியது. அந்த வகையில் அன்று நம்மோடு இருந்த சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த மற்ற மாநில மக்களுக்கும்கூட இந்தப் பெருமையில் சற்று பங்கு உண்டு! ஏனெனில், தென் இந்தியாவிலேயே சட்டமன்ற நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தகுதி பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடுதான் உள்ளது” என்று மிக மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் எழுதி இருக்கிறார். இவை எல்லாம் அ.தி.மு.க.வுக்குப் புரியாது!
முத்தமிழறிஞர் கலைஞரது படத்திறப்பு விழாவுக்கு வரக்கூடாது என்றுமுடிவெடுத்த அ.தி.மு.க., அதைச் சொல்வதற்குக் கூச்சப்பட்டு, சட்டமன்றத்துக்கே இது நூற்றாண்டு விழா அல்ல என்ற புதுக்குண்டை போட்டது. “விழா நடத்துவதற்குத் திட்டமிட்டபோது முதலமைச்சர் அவர்கள் என்னை அழைத்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலமைச்சர் அமரும் வரிசையில் அவருக்கும் இடம் ஒதுக்கப்படும் என்று சொன்னார்கள்.
விழாவில் அவரும் வாழ்த்துரைக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதை நான் அவரிடம் சொல்லி அழைத்தேன். அனைவரிடமும் கலந்து பேசி பின்னர் சொல்வதாக பழனிசாமி சொன்னார். கலந்து கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுத்த அவர், அதை என்னிடம் சொல்லாமல் சட்டசபைச் செயலாளரிடம் சொல்லி இருக்கிறார்” - என்று அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
இதைவிட பழனிசாமிக்கு வேறு என்ன மரியாதை தந்திருக்க முடியும்? இத்தகைய வரலாற்றுச் சிறப்பு விழாவில், பங்கெடுக்க முடியாமல் பழனிசாமியைத் தடுத்தது எது? தன்னுடைய இயலாமைதான் அவரைத் தடுத்திருக்கும். ‘ஜெயலலிதா படத்தைத் திறந்து வைக்க நாம் பிரதமருக்காகக் காத்திருந்தோம். அவர் வரவில்லை. ஆனால் கலைஞர் படத்தைத் திறந்து வைக்க மூன்று நாளில் தேதி வாங்கி குடியரசுத் தலைவரையே அழைத்து வந்துவிட்டார்களே' என்ற தனது இயலாமையை அவரே நொந்து கொண்டு இருப்பார். ஜெயலலிதா, கலைஞராகி விட முடியாது. முதலமைச்சர் நாற்காலியில் சில ஆண்டுகள் உட்கார்ந்து விட்டதால் பழனிசாமிகள், தலைவர்கள் ஆகிவிட முடியாது.
கலைஞர் படத்தைத் திறந்து வைக்கும் விழாவை பழனிசாமிகள் புறக்கணித்ததால், கலைஞருக்குப் பெருமைதான். ஆனால் பழனிசாமி, குடியரசுத் தலைவரின் விழாவைப் புறக்கணித்திருக்கிறார். குடியரசுத் தலைவரை வரவேற்கக் கூட இந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லை. பழனிசாமிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள் என்பதன் அடையாளம் இது!