இந்தியாவில் தாங்கள் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை, ஜான்சன் அண்ட் ஜான்சன் திரும்பப் பெற்றுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தங்களது ஜான்சன் கோவிட்19 தடுப்பூசிக்கான ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கக் கோரி இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்க்குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இன்று திரும்பப் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, அரிதான நரம்பு கோளாறுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது என எஃப்.டி.ஏ எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டது கண்டறியப்பட்ட நிலையில் அந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்கா தடை விதித்தது. ஆனால் அபாயங்கள் குறைவாக இருப்பதை உறுதி செய்த பின்னர் ஏப்ரல் மாதத்தில் இந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.