இந்தியா

‘ஒன்றிய அரசு’ என துணைநிலை ஆளுநர் ஒப்புதல்... அதன்படியே பதவியேற்ற புதுச்சேரியின் புதிய அமைச்சர்கள்!

புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “இந்திய ஒன்றிய அரசு” என்று குறிப்பிட்டார்.

‘ஒன்றிய அரசு’ என துணைநிலை ஆளுநர் ஒப்புதல்... அதன்படியே பதவியேற்ற புதுச்சேரியின் புதிய அமைச்சர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரி மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். பதவிப் பிரமாணம் செய்து வைத்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “இந்திய ஒன்றிய அரசு” என்று குறிப்பிட்டுப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி பல்வேறு இழுபறிக்குப் பிறகு நேற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அமைச்சர் பதவிகளை பகிர்ந்துகொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த 2-ந் தேதி இறுதி செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

இந்தப் பட்டியலில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, பா.ஜனதாவின் நமச்சிவாயம், சாய். சரவணகுமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இந்த அமைச்சர்கள் பட்டியலுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் நேற்று எளிமையாக நடைபெற்றது. புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கான ஒன்றிய அரசின் உத்தரவை தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் வாசித்தார்.

அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில், நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய்.சரவணகுமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

‘ஒன்றிய அரசு’ என துணைநிலை ஆளுநர் ஒப்புதல்... அதன்படியே பதவியேற்ற புதுச்சேரியின் புதிய அமைச்சர்கள்!

அப்போது புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தபோது “இந்திய ஒன்றியத்திற்குட்பட்ட புதுச்சேரி...” என்றுகூறி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என்பதில் கூடாட்சித் தத்துவம் இருக்கிறது; ஒன்றிய அரசு எனும் பதத்தையே பயன்படுத்துவோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வினர் ஒன்றிய அரசு என அழைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி அமைச்சரவை பதவியேற்பில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ‘ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிட்டு வாசித்த பதவியேற்பு உறுதிமொழியை வாசித்துத்தான் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories