அ.தி.மு.க ஆட்சியில் மதுபான கூடங்களுக்கான (டாஸ்மாக் பார்) குத்தகைகாலத்தை நீட்டித்ததால் தமிழ்நாடு அரசுக்கு 19 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு டாஸ்மாக்கில் 6,809 சில்லறை விற்பனை கடைகளும், அதன் உடன் இணைந்த 3,862 மது அருந்தும் (பார்கள்) கூடங்களும் உள்ளன. இதில், தனியாருக்கு மதுக்கூடங்கள் நடத்த உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கான உரிமத் தொகையை ஒப்பந்ததாரரிடம் பெற்று ஒரு விழுக்காடு தொகையை தனது ஏஜென்சி கமிஷனாக கழித்து மீதி தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்.
இந்நிலையில், கடந்த 2016-17ம் ஆண்டிற்கான தணிக்கையின்போது 9 மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்குட்பட்ட 3205 மதுக்கூடங்களில் 326 மதுக்கூடங்களின் வருடாந்திர குத்தகை காலம் 2016 ஜூலை மற்றும் 2017 பிப்ரவரி இடைப்பட்ட காலங்களில் முடிவுற்றதாக கண்டறியப்பட்டது.
டாஸ்மாக் நிர்வாகம் இதன் குத்தகை காலத்தை அவ்வப்போது நீட்டித்து 2017 டிசம்பர் வரை நடப்பு தொகையிலேயே நடத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தது.
இந்த காலகட்டத்திலேயே ஒப்பந்தப்புள்ளி கோரி விண்ணப்பங்கள் வராத நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான ஒப்பந்தப்புள்ளி ஆகிய காரணங்களைக்காட்டி டாஸ்மாக் நிர்வாகம் அதிக வருமானம் ஈட்டுவதற்கு எந்த ஒப்பந்தப்புள்ளிகளையும் முடிவு செய்யவில்லை. எனவே குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டது.
2012-13ம் ஆண்டு 24,818 கோடி அளவு இருந்த மதுபான விற்பனை 2016-17ல் 31,247 கோடியாக அதிகரித்தது. இந்த நான்கு ஆண்டுகால விலை உயர்வு 26 விழுக்காடாகும். இந்த மதுபான விற்பனைஉயர்வு மதுபானக் கூடத்தில் விற்பனையாகும் நொறுக்குத்தீனியின் விற்பனையிலும், காலிபாட்டில்களின் எண்ணிக்கையிலும் கட்டாயமாக ஒரு உயர்வை கண்டிருக்கும். ஆனால், இந்த உயர்வை கருத்தில்கொண்டு மதுக்கூட உரிமத்தொகையை உயர்த்தாமல் அதே நிலையில் குத்தகைகாலத்தை நீட்டித்தது நியாயமற்றதாகும்.
குத்தகை ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நேரிடும் சமயத்தில் உரிமத்தொகையை உயர்த்த ஒப்பந்தத்தில் ஏதுவான வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அரசு கருவூலத்திற்கு ரூ.18.67 கோடி வருவாய் இழப்பும், டாஸ்மாக் தனக்கு கிடைக்கவேண்டிய ஏஜென்சி கமிஷனாக ரூ.19 லட்சத்தையும் 9 மாவட்டத்திற்குட்பட்ட 326 சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடத்தின் குத்தகை காலத்தை நீட்டித்ததால் இழந்தது.