இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்முதல் திட்டத்தில் சரியான புரிதல் இல்லாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. முன்னதாக 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு கட்டணம் நிர்ணயம் செய்திருந்தது. இதனால் மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும், கொரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான வரியை குறைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பின்னர், ஒன்றிய அரசு ஜூன் 21 முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்தது. மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை கூட்டி கொரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான வரியையும் ஒன்றிய அரசு குறைத்தது. இருப்பினும் உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கொரோனா மருத்துவ பொருட்களுக்கு அதிக அளவு இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வை, மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இவர்களின் இந்த ஆய்வு முடிவில், கொரோனா தொடர்பான சிகிச்சை பொருட்களுக்கு ஒன்றிய அரசு 15.2%இறக்குமதி வரி விதிக்கிறது என்றும் இது சீனாவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், அமெரிக்காவை ஒப்பிடும்போது இது ஏழு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் வருவாய் குறைந்த நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது 60% அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும் கிருமி நாசினிக்கு இந்திய ஒன்றிய அரசு 55.8% இறக்குமதி வரி விதிக்கிறது. ஆனால் சீனாவில் 11.5% மற்றும் அமெரிக்காவில் 2% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. இப்படி அகச்சிவப்பு வெப்பமானிகளுக்கு 670%, பாதுகாப்பு ஆடைகள்142%, வென்டிலேட்டர்கள் 117%, ஃப்ளோமீட்டர் மற்றும் ஆக்சிஜனுக்கான தோர்ப் குழாய் 72%, ஆக்சிஜனுக்கான எரிவாயு சிலிண்டர்கள் 70% என மற்ற நாடுகளைக் நாட்டிலும் இந்தியா அதிகமான வரிகளை விதித்துள்ளது.
இந்தியாவை விட வருவாய் குறைந்த நாடுகளைக் காட்டிலும் ஒன்றிய அரசு அதிகமான வரியை விதித்துள்ளதுதான் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.