இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இருப்பினும், ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்முதல் திட்டத்தில் சரியான புரிதல் இல்லாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 86.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் எப்படி ஒரே நாளில் இவ்வளவு தடுப்பூசி போடப்பட்டது என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் தடுப்பூசிகளை பதுக்கிவைத்து ஒரே நாளில் தடுப்பூசிகளைப் போட்டு நாங்கள் இவ்வளவு தடுப்பூசிகளைப் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது என்ற குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தடுப்பூசிகளைப் பதுக்கி மொத்தமாக போடும் மோடி அரசுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஞாயிற்றுக்கிழமையன்று பதுக்கி வையுங்கள்; திங்கள்கிழமையன்று தடுப்பூசி போடுங்கள்; செவ்வாய்க்கிழமை பழைய நிலைமைக்கே செல்லுங்கள். இதுதான் ஒருநாள் கொரோனா தடுப்பூசி சாதனையில் ரகசியம்.
இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப்பட வேண்டும். ஏன் மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசும் கொடுக்கலாம். மோடி ஹை.. மும்ஹின் ஹை என்பதை மோடி ஹை மிராக்கிள் என மாற்றிப் படிக்கவேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.