தெலங்கானா மாநிலம், மன்சேரியல் மாவட்டம் கோபால்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தய்யா. இவரது மனைவி நர்சம்மா. இவருக்குக் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து நர்சம்மா கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்குத் தொற்று உறுதியானது. மருத்துவர்கள் அவரை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர் அவரது கணவர் பெத்தய்யா, மனைவியை வீட்டில் சேர்க்காமல் வெளியே இருக்கும் குளியலறையில் அவரை தங்க வைத்துள்ளார். மேலும் கணவரும், உறவினர்களும் வீட்டில் இருக்கும் கழிவறையை நர்சம்மா பயன்படுத்த விடாமல் தடுத்துள்ளனர். இதனால் நர்சம்மா கிராமத்தின் ஒதுக்குப்புற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளுக்கம், போலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் கிராமத்திற்கு வந்த போலிஸார் பெத்தய்யா மற்றும் நர்சம்மாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் நர்சம்மாவிடம் கொரோனா தனிமை மையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து வீட்டிலேயே ஒரு அறையில் நர்சம்மாவை தனிமைப்படுத்த வேண்டும் என கணவர் பெத்தய்யாவிடம் வலியுறுத்தினர். பின்னர் நர்சம்மா வீட்டிலேய ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
மேலும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் இல்லாதவர்களுக்கு கொரோனா சிகிச்சை முகாமிலேயே தங்க வைத்து சிகிச்சை தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.