தெலங்கானா மாநிலம் திம்மபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், நெமாலிகுட்டாவை பகுதியை சேர்ந்தவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பின்னர் அடிக்கடி மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பெண்ணின் கணவர் ஒடிசாவுக்குச் சென்று அங்கு ஆட்டோ ஒட்டுநராக வேலைப் பார்த்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவர்கள் ஆலோசனைபடி வீட்டு தனிமையில் அவர் இருந்து வந்துள்ளார். அப்போது வீட்டில் இருக்கும் மருமகள் நமக்கும் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் மாமியாரிடமிருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாமியார் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் மீது பாசத்தைக் காட்டுவது போல் நடித்து, அவர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கையால் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட மருமகளை வீட்டை விட்டும் துரத்தியுள்ளார்.
மாமியாரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மருமகள், தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தனது சகோதரர் வீட்டிற்குச் சென்று அங்குத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதையடுத்து கிராம மக்களும், உறவினர்களும் கொடூரமாக நடந்து கொண்ட மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.