இந்தியாவில் கொரோனா வைரஸ் இண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் வேகமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், ஒன்றிய அரசு தடுப்பூசி திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாததால், தற்போது நாடு முழுவதுமே தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசியே மிகப்பெரிய ஆயுதமாகக் கொண்டு மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் வகையில் தடுப்பூசியை மாநில அரசுகளே நேரடியாக வாங்கும் வகையிலான செயல்களிலும் ஈடுபட்டது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதற்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது, மாநிலங்களுக்கான தடுப்பூசியை ஒன்றிய தொகுப்பில் இருந்து விடுப்பதிலும் மோடி அரசு தொடர்ந்து மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மேலும் 14 முதல் 44 வயது வரை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்காக வழங்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றது. இதனால் ஆவேசமடைந்த பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள், “செலவு செய்வது நாங்கள்; இதில் பிரதமரிடம் படம் இடம்பெறுமா?” என கேள்வி எழுப்பி அவரின் புகைப்படத்தை படத்தை அதிரடியாக நீக்கினர்.
தற்போது மேற்கு வங்க முதல்வரும் மோடியின் படத்தை நீக்கியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், ‘எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என்ற வாசகம் ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் இடம் பெற்றுள்ளது.