இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது முதல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா நோயாளிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், மருத்துவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். தற்போது கொரோனா இரண்டாவது அலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் அதிகம் உயிரிழந்து வரும் நிலையில், மருத்துவர்களும் அதிகமாக கொரோனாவுக்கு இரையாகி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலைக்கு 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயேஷ் லெலே கூறுகையில், "இந்தியா முழுவதும் நேற்று 50 மருத்துவர்களும், ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து 244 பேரும் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்துள்ளனர்.
இதில் பீகாரில் அதிகபட்சமாக 69 பேரும், உத்தரபிரதேசத்தில் 34, டெல்லியில் 27 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றுக்கு ஆயிரம் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.