இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோதே பல மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது மத்திய அரசு கொரோனா நிவாரண பணிகளுக்கென பி.எம். கேர்ஸ் நிதியை உருவாக்கியது.
இதற்குப் பல முன்னணி தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் என நிதி குவிந்தன. ஆனால் அந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்தாமல் இருந்துவந்தது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, பி.எம். கேர்ஸ் நிதியம் மூலமாக மத்திய அரசு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.2000 கோடிக்கு வென்ட்டிலேட்டர்களை வாங்கியது. அந்த வகையில், பஞ்சாப்புக்கு 320, பீகாருக்கு 109, ராஜஸ்தானுக்கு 1,900, உத்தர பிரதேசத்திற்கு 200, கர்நாடகாவுக்கு 2,025, தெலங்கானாவுக்கு 30, ஒடிசாவுக்கு 34 என பல மாநிலங்களுக்கு வென்ட்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பிய வென்ட்டிலேட்டர்களில் பல தரமற்றவையாக இருப்பதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேலை செய்யாத வெண்டிலேட்டர்களுடன் பிரதமரை ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,"பி.எம். கேர்ஸ் நிதியத்திலிருந்து வாங்கப்பட்ட வென்ட்டிலேட்டர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகின்றன.
மிகவும் தவறான முடிகளை எடுப்பது, அதற்கான வேலை என்னவோ அதைச் செய்யாமல் மற்ற அனைத்தையும் செய்வது, அவற்றுக்கு தேவை இருக்கும்போது உதவாமல் இருப்பது ஆகிய 3 ஒற்றுமைகள் பி.எம்.கேர்ஸ் வென்ட்டிலேட்டர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ளன" என பதிவிட்டுள்ளார்.