கொரோனா நிவாரண பணிகளுக்காக உருவாக்கப்பட்ட பி.எம். கேர்ஸ் நிதியம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிதியத்திற்கு பல முன்னணி தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், வெளிநாட்டு நிதிகள் குவிந்தன. ஆனால் அந்த நிதி எந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பி.எம். கேர்ஸ் நிதி மூலம் வாங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் தரமற்றவையாக இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பி.எம். கேர்ஸ் நிதியம் மூலமாக மத்திய அரசு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.2000 கோடிக்கு வென்டிலேட்டர்களை வாங்கியது. ஐ.சி.யு படுக்கையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க இந்த வென்டிலேட்டர்கள் மிகவும் அவசியமானவை. அந்த வகையில், பஞ்சாப்புக்கு 320, பீகாருக்கு 109, ராஜஸ்தானுக்கு 1900, உத்தரப்பிரதேசத்திற்கு 200, கர்நாடகாவுக்கு 2,025, தெலங்கானாவுக்கு 30, ஒடிசாவுக்கு 34 என அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நிறைய வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவைகளில் பெரும்பாலானவை ஓட்டை உடைசலாக தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மாநில அரசுகள் வென்டிலேட்டர்களை பெற்ற கையோடு அவற்றை பயன்படுத்தப்படாமல் குடோன்களில் கொட்டி வைத்துள்ளன.
ராஜஸ்தானுக்கு வழங்கப்பட்ட 1900 வென்டிலேட்டர்களில் 500 வென்டிலேட்டர் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அவற்றிலும் பெரும்பாலானவை 1-2 மணி நேரம் மட்டுமே இயங்குவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் புகார் கூறி உள்ளார்.
இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் பிரதமர் மோடி கூட மாநிலங்களில் பயன்படுத்தப்படாத வென்டிலேட்டர்களை தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ள நிலையில், தரமற்ற இதுபோன்ற வென்டிலேட்டர்கள் மூலம் மக்கள் உயிருடன் விளையாடுவது எந்த வகையில் நியாயம் என மருத்துவ நிபுணர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வாடகைக்கு விடுங்க பா.ஜ.க எம்பி திமிர் பேச்சு
இதுதொடர்பாக பா.ஜ.க எம்.பி ராஜ்யவர்தன் சிங் ரதோர் கூறுகையில், :"மாநில அரசுகளால் வென்டிலேட்டர்களை சரி செய்ய முடியாவிட்டால் அவற்றை தனியார் மருத்துவமனைகளுக்கு வாடகைக்கு கொடுத்து விடுங்கள். அவர்கள் சரி செய்து பயன்படுத்திக் கொள்வார்கள்” என்றார்.
சரி செய்யத் தெரியவில்லை வென்டிலேட்டர்கள் தரமற்றவையாக இருப்பதாக பல மாநில அரசுகள் புகார் கூறியும், மத்திய அரசு அவற்றை வழக்கம் போல் காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை. “இதெல்லாம் பொய் குற்றச்சாட்டு, மாநில அரசாங்கங்களில் சரியான டெக்னீசியன்கள் இல்லை. அதனால்தான் அவர்களால் வென்டிலேட்டர்களை சரியாக இயக்கத் தெரியவில்லை. பல மாநில மருத்துவமனைகளில் முறையான கட்டமைப்பு வசதி இல்லாததால் வென்டிலேட்டரை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர் “ என மத்திய அரசு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
- நன்றி தினகரன்.