இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று குறைந்து வந்தாலும், உயிரிழப்போர் எண்ணிக்கை நம்மை அச்சமடையவே செய்கிறது.
டெல்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களின் கொரோனா பாதிப்பு கவலை கொள்ளவே செய்கிறது. அதிலும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருப்பது வேதனையடையச் செய்கிறது.
கர்நாடக மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இதில் பாதி பெங்களூருவில் மட்டுமே ஏற்படுகிறது. மேலும் பெங்களூரூவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
தொடர்ந்து உயிரிழப்புகள் வெகுவாக அதிகரித்து வருவதால் பெங்களூர் நகரத்தில் 24 மணி நேரமும் சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கொரோனா சடலங்களை எரிக்க மாநகராட்சி சார்பில் 7 தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தகன மேடைகளில் கடந்த மூன்று வாரங்களாகச் சடலங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் கிரானைட் குவாரிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.
பெங்களூருவின் புறப்பகுதியில் அமைந்திருக்கும் கெட்டனஹள்ளியில் உள்ள கிரானைட் குவாரியில் இரும்பு பைப்புகளை கொண்டு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் சில நாட்களாக கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு இடங்களில் உள்ள கிரானைட் குவாரிகளில் இறந்த கொரோனா நோயாளிகளை எரிப்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
மேலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு அரசாங்கம் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை வழங்கியிருந்தாலும், அவர்கள் காத்திருக்கும் வகையில் தங்குமிடங்கள் போன்ற வசதிகள் செய்யப்படவில்லை. இந்த தகன மேடையில் வேலை செய்யும் பல தொழிலாளர்களுக்கு இதில் முன் அனுபவம் இல்லை. ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மணி நேரம் வரை வேலை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த அளவுக்கு சடலங்கள் குவிகின்றன என சடலங்களை எரிக்கும் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.