இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் சடங்களை உரிய முறையில் அகற்றுவதில் பல்வேறு சிரமங்களை மத்தியில் ஆளும் அரசு சந்தித்து வருகிறது.
குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள பக்சார் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்ததால் அப்பகுதி மக்கள் அச்சடைந்துள்ளனர். பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய இரு மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது பக்சார் மாவட்டம்.
இந்த மாவட்டத்தில் வழியாக கங்கை நதி செல்கிறது. இந்நிலையில் திங்களன்று கங்கை நதியில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியதைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், இந்த சடலங்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் தான் இறந்தவர்களின் சடலங்களை கங்கை ஆற்றில் வீசும் வழக்கம் உள்ளது. எனவே உத்தர பிரதேச மாநிலத்தின் பராயிச், வாரணாசி, அலகாபாத் அகிய பகுதியில் இந்த சடலங்கள் வீசப்பட்டிருக்கலாம். மேலும் இவை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களாகவும் இருக்குமோ? என்ற சந்தேகமும் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து உள்ளூர் வாசிகள் கூறுகையில், “கங்கை நதியில் 150க்கும் மேற்பட்ட உடல்கள் இருக்குமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. 40 உடல்கள் கரையை ஒதுங்கியுள்ளது. இவை கிட்டத்தட்ட ஒருவாரம் தண்ணீரில் மூழ்கியிருக்கக் கூடும். கரை ஒதுக்கிய உடல்களைத் தெரு நாய்கள் கடித்து திண்கின்றன.
இதனால் எங்கள் பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த உடல்கள் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களாக இருக்குமோ என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளது” என தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி ஆய்வு செய்ய வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.