இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 3 லட்சங்களை கடந்து பதிவாகி வருகிறது.
இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் தினந்தோறும் கொத்து கொத்தாக மடிகின்றனர். குறிப்பாக டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இடுகாடுகளில் உயிரிழந்தவர்களை எரியூட்ட இடமில்லாமல் சாலைகளிலேயே எரிக்கப்பட்டு வருகின்றன.
ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் மக்கள் ஆங்காங்கே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற நிலையை இந்தியா சந்திப்பதற்கு மோடி அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடிக்கு கிடுக்குப்பிடி கேள்வியை முன்வைத்துள்ளார்.
அதில், பிரதமர் அவர்களே, நோக்கமே இல்லாமல் டிவி முன்பு மீண்டும் மீண்டும் தோன்றினால் வைரஸ் ஒழியாது. அதேபோல முதல்வர்களுக்கு பாடம் எடுக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல. முதலில் மாநில அரசுகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் உங்கள் பொறுப்பை காட்டுங்கள்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறக்கிறார்கள். மாநில அரசுகள் ஆக்சிஜன் கேட்டால் பிரதமரோ பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுங்கள் என்கிறார்.
இந்தியாவிலேயே ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு நிகழும் போது எந்த காரணத்திற்காக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்?
கர்நாடகாவின் உண்மை நிலையை முதலமைச்சராக உள்ள எடியூரப்பா பிரதமரிடம் எடுத்துக் கூறினாரா? நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் மக்கள் குவிகின்றனர். அவர்களெல்லாம் என்ன செய்ய வேண்டும் பிரதமர் மோடி அவர்களே?
எடியூரப்பாவோ கர்நாடகாவில் நிலைமை கைமீறி போய்பிட்டது என கையை விரித்துவிட்டார். இப்படியான திறமையற்ற முதலமைச்சரை வைத்துக்கொண்டு நீங்கள் இதனை எப்படி தீர்க்க இருக்கிறீர்கள் பிரதமரே?
இவ்வாறு சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார் சித்தராமையா.