முரசொலி தலையங்கம்

கொரோனாவை விட மாநிலங்களை ஒழிப்பதுதான் மறைமுகத் திட்டமா? - மோடி அரசின் கொள்கையும் தடுப்பூசி கொள்ளையும்!

தடுப்பூசி விநியோகிப்பதில் பெருமளவில் கொள்ளை அரங்கேறுவதை சுட்டிக்காட்டி முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

கொரோனாவை விட மாநிலங்களை ஒழிப்பதுதான் மறைமுகத் திட்டமா? - மோடி அரசின் கொள்கையும் தடுப்பூசி கொள்ளையும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எரிகிற வீட்டில் எடுத்தது லாபம் என்பதைப் போல - கொரோனா காலத்திலும் கொள்ளைகள் தொடர்கிறது. அதுவும் கொரோனாவை வைத்து அடிக்கும் கொள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறதே தவிர குறையவில்லை! கொரோனா தடுப்பூசியின் விலையின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர்களுக்கு நன்மை செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுமைக்கும் கேட்கிறது.

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அது அவரது நண்பர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களை விற்றாலும் அதனால் பலனடைபவர்கள் அவரது நண்பர்களாக இருப்பார்கள். ரயில் நிலையங்களை விற்றாலும் விமான நிலையங்களை விற்றாலும் அதனால் நன்மை அவரது நண்பர்களுக்கே. இதோ இப்போது கொரோனாவால் நன்மை அடைபவர்களும் மோடியின் நண்பர்களே! கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், ஒரே ஊசிக்கு மூன்று விதமான விலையை நிர்ணயித்துள்ளது.

ஒரு டோஸ் மருந்தை மத்திய அரசு வாங்கினால் 150 ரூபாய். அதையே மாநில அரசு வாங்கினால் 400 ரூபாய். தனியார் மருத்துவமனைகள் வாங்கினால் 600 ரூபாய்க்கு மேல். இதுதான் சீரம் நிறுவனத்தின் மருந்துக் கொள்கை. கொள்கை அல்ல; இது கொள்ளை. மாநில அரசுகளே, தடுப்பூசியைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று இப்போது அறிவித்துள்ளார்கள். எதற்காக இந்த அறிவிப்பு என்று இப்போது தெரிகிறதா?

கொரோனாவை விட மாநிலங்களை ஒழிப்பதுதான் மறைமுகத் திட்டமா? - மோடி அரசின் கொள்கையும் தடுப்பூசி கொள்ளையும்!

மாநில அரசுகளே அதிகப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான். ஏற்கனவே மாநில அரசின் வரி வருவாயை ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாக மத்திய மோடி அரசு தனது கஜானாவுக்குக் கொண்டு போய்விட்டது. இதனால் பல்வேறு மாநிலங்கள் ‘வறுமைக் கோட்டுக்கு கீழே' வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா காரணமாக அனைத்தும் தடைப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து தடுப்பூசியையும் கொள்ளை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் எப்படி?

கொரோனா ஒழிப்பை விட‘மாநிலங்கள் ஒழிப்பு தான்' மோடி அரசின் மறைமுகத் திட்டமா? ஒரு தனியார் நிறுவனத்தை வாழ வைக்க மொத்த மாநிலங்களையும் சுரண்டத் திட்டமா? ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு மூன்று வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும்? அப்படி ஒரு நிறுவனம் விலையை நிர்ணயிக்குமானால் அதனை தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தானே இருக்கிறது? மாறாக, மத்திய அரசே இதற்கு பச்சைக் கொடி காட்டுகிறது என்றால் இது பச்சைத் துரோகம் ஆகாதா?

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் எதையாவது செய்துள்ளார்களா இந்த ஓராண்டு காலத்தில் என்றால் இல்லை. ஆனால் சுரண்டலை மட்டும் நடத்துகிறார்கள். தடுப்பூசிக்குக் கூட பணம் வசூலிக்கும் கொடூர அரசு இது. அதுவும் அதிகப்படியான பணம் வசூலிக்கும் பஞ்ச மாபாதக பா.ஜ.க. அரசு இது. இந்த விலை நிர்ணயம் குறித்து விரிவாக எழுதியுள்ள மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன், "இங்கே இந்தியன் டிரக்ஸ் அண்ட் காஸ்மாட்டிக்ஸ் சட்டம், இந்திய காப்புரிமை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் எல்லாம் என்ன ஆனது?" என்று கேட்டுள்ளார்.

இங்கு மோடியும், அவரது கார்ப்பரேட் நண்பர்களும் வைப்பதுதான் சட்டம் என்று எப்போதோ ஆகி விட்டது. சாவித்திரி கண்ணன் தனது கட்டுரையில் பல்வேறு தகவல்களைத் தருகிறார்.

*மருந்து தயாரிப்புத் துறை என்பது அரசு வசம்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் ஆரோக்கியத்தை சாத்தியப்படுத்த முடியும். அது ஒரு போதும் தனியார்கள் கோலோச்சும் நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்பது என் உறுதியான நிலைப்பாடு என்றார் பிரதமர் ஜவகர்லால் நேரு!

இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் என்ற அரசுத்துறை நிறுவனத்தை 1961 ஆம் ஆண்டு திறந்த போது அவர் பேசியதுதான் மேற்படி வாசகம்! இந்த நிறுவனத்திற்கு தலைமை இடம் தவிர்த்து நான்கு கிளைகள் உருவாக்கப்பட்டது. அந்த நிறுவனங்களில் நான்கை மோடி அரசு இழுத்து மூடிவிட்டது!

*உயிர் காக்கும் மருந்துப் பொருள் தயாரிப்பில் இந்தியா சுய சார்பு நிலையை எட்ட வேண்டும். தனியார்களையோ, வெளி நாடுகளையோ நம்பி இருக்கக்கூடாது என்பதற்காக ஐ.டி.பி.எல்.-ஐ சோவியத் யூனியனின் ஒத்துழைப்போடு உருவாக்கினார் நேரு.

இதன் முதலாவது ஆலை ஹைதராபாதில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம், காலரா ஒழிப்பு, தொழுநோய் ஒழிப்பு, காச நோய் ஒழிப்பு ஆகியவற்றில் ஐ.டி.பி.எல்.-லின் பங்களிப்போடுதான் நாம் இமாலய சாதனைகளை நிகழ்த்தினோம்.

* இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சினுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தவிர ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தும் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு முன் பணமாக தற்போது ரூ.4,500 கோடி தரப்போவதாக பிரதமர் கூறியுள்ளார்.

* இந்திய மருந்து சந்தை என்பது தனியார் நிறுவனங்களின் வேட்டைக் காடாக உள்ளது. இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன! இவர்களின் ஆண்டு சந்தை ரூபாய் 4,50,000 கோடிகளாகும். அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐ.டி.பி.எல்.லையும், மற்ற எட்டு அரசு நிறுவனங்களில் ஆறையும் செயல் இழக்க வைத்துவிட்டு, தனியாரிடமிருந்து அனைத்தையும் கொள்முதல் செய்யும் துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டது.

* இந்தக் காரணங்களால்தான் அரசு நிர்பந்திக்கும் தடுப்பூசி மருந்துகளின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. இதுவே அரசு தயாரிப்பு என்றால் மக்களுக்கு மகத்தான நம்பிக்கை ஏற்பட்டிருக்குமல்லவா? என்று அவர் பல்வேறு ஆதாரப்பூர்வ தகவல்களைக் கொடுத்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்.

ஆர்.டி.பி.எல். எனப்படும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை சப்ளை செய்யும் ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், பி.சி.பி.எல். எனப்படும் பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், தமிழ்நாடு பார்மசூட்டிக்கல்ஸ், இந்துஸ்தான் ஆன்டிபயாடிக் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் இவை அனைத்தும் மத்திய அரசின் மாற்றாந்தாய் கொள்கையால் முன்னேற்றம் காண முடியாமல் போய்விட்டன என்கிறார் அவர். மக்களுக்கு மாபெரும் வஞ்சகத்தைச் செய்து வருகிறது மோடி அரசு. மக்கள் திரும்பினால் காணாமல் போய்விடுவீர்கள்!

banner

Related Stories

Related Stories