இந்தியா

21 நாளில் முடியும் என்றார் மோடி.. ஓராண்டு கடந்தும் மீளமுடியாத சோகம்.. கொரோனாவால் மக்கள் இழந்தது என்ன?

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றோடு ஒருவருடம் நிறைவடைகிறது.

21 நாளில் முடியும் என்றார் மோடி.. ஓராண்டு கடந்தும் மீளமுடியாத சோகம்.. கொரோனாவால் மக்கள் இழந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில், மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை (Janata Curfew) முதல் முறையாக அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது என்ன நாடு முழுவதும் ஊரடங்கு என பல்வேறு கேள்விகளுடன் மக்கள் அச்சமடைந்தனர். சரி ஒருநாள்தானே என தங்களின் அச்சத்தைப் போக்கி அந்நாளைக் கடந்தனர்.

பின்னர், மார்ச் 24ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர் நரந்திர மோடி, இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு என அறிவித்தார். பேருந்துகள், ரயில்கள் இயங்க தடை, அத்தியாவசிய கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடுகள், மக்கள் வீதிக்கே வரக்கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.

பிரதமர் மோடி திடீரென அறிவித்த ஊரடங்கால், வெளிமாநிலங்களிலும், வெளியூர்களிலும் வேலை பார்த்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். பேருந்துகள் ஓடவில்லை, தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. பலருக்கு வேலையும் இல்லை, வீட்டு வாடகை கொடுக்க வேண்டும், இப்படி எல்லா பக்கமும் நெருக்கடிகள் வந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் நின்றனர்.

21 நாளில் முடியும் என்றார் மோடி.. ஓராண்டு கடந்தும் மீளமுடியாத சோகம்.. கொரோனாவால் மக்கள் இழந்தது என்ன?

எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் என்ன செய்வதன்றே தெரியாமல் தவித்தனர். இந்த 21 நாட்களை இந்தியா கடந்துவிட்டால், மக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடலாம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஆனால், ஒரு வருடத்தைக் கடந்தும், இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து இந்தியா மீளவில்லை.

மத்திய, மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்யாததால், தங்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, சாலைகளில் நடந்தே தங்களின் ஊர் நோக்கிச் சென்ற கொடூரத்தையும் இந்தியா பார்த்தது. பின்னர், மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்தது. ஆனால் அதையும் முறைப்படுத்தாததால், தொழிலாளர்கள் பல துயரங்களைச் சந்தித்தனர். தண்ணீர், உணவு கூட கிடைக்காமல் ரயில் நிலையங்களில் பல தொழிலாளர்கள் இறந்த கொடூரங்களும் அரங்கேறின.

பள்ளி, கல்லூரிகளும் கொரோனா ஊரடங்கால் முழுமையாக மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் தற்போது ஆன்லைன் வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தாலும் கற்றல் முறை முன்பு போல் இல்லாததால், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. ஊரடங்கால் மக்கள் பல சிரமங்களைச் சந்தித்தபோது, இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், விளக்கேற்றுங்கள், ஒலி எழுப்புங்கள் என மாய வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

21 நாளில் முடியும் என்றார் மோடி.. ஓராண்டு கடந்தும் மீளமுடியாத சோகம்.. கொரோனாவால் மக்கள் இழந்தது என்ன?

ஊரடங்கு இந்த மாதம் முடிந்துவிடும், அடுத்த மாதம் முடிந்துவிடும் என காத்திருந்த மக்களுக்கு, ஊரடங்கு என்பது ஒரு தொடர் கதையாகவே மாறிவிட்டது. ஒருபுறம் ஊரடங்கால் துயரங்களைச் சந்தித்த மக்களுக்கு மறுபுறம் கொரோனாவின் தீவிர பரவலும் அச்சத்தைக் கொடுத்தது. பின்னர் செப்டம்பர் மாதங்களில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் கொஞ்சம் மூச்சுவிட முடிந்தாலும், இன்னும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீளமுடியாமல்தான் இருந்து வருகின்றனர்.

திட்டமிடப்படாத கொரோனா ஊரடங்கால், இந்தியாவில் கடன் சுமையும், குழந்தைத் தொழிலாளர்களும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளதாக வல்லுநர்களும் பல ஆய்வு முடிவுகளும் தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற 21 நாள் ஆகும் என பிரதமர் மோடி அன்று சொன்னார். ஆனால் ஓராண்டு ஆகிவிட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1.6 லட்சம் பேர் இறந்துள்ளனர். 12.2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். லட்சக்கணக்கான தொழில்கள் முடங்கியுள்ளன. தற்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் இதே மார்ச் மாதத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு வருட கொரோனா பாடத்தைக் கற்றுக்கொண்ட மோடி அரசு இந்த முறையாவது சரியாக நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்றுமா?

banner

Related Stories

Related Stories