மு.க.ஸ்டாலின்

“ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் கேபினட் தான் இப்போதிருக்கும் ஆட்சி" - மு.க.ஸ்டாலின் பரப்புரை!

“மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

“ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் கேபினட் தான் இப்போதிருக்கும் ஆட்சி" - மு.க.ஸ்டாலின் பரப்புரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்களை வழங்கி, பிரித்துக் கொண்டு கொள்ளையடிப்பதுதான் பழனிசாமி சொல்லும் வெளிப்படையான ஆட்சி நிர்வாகமா?" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (23-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, வேப்பனஹள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“உங்களைத் தேடி நாடி உங்களிடம் உரிமையோடு, உங்களில் ஒருவனாக வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல. எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நேரத்திலும் உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகளில் உரிமையோடு பங்கேற்பவன் தான் இந்த ஸ்டாலின். எனவே அந்த உரிமையோடு உணர்வோடு உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.

வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு நீங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் செங்குட்டுவன் அவர்கள், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து கிருஷ்ணகிரி தொகுதியில் சிறப்பாக பணியாற்றி மக்களின் அன்பை ஆதரவை பெற்றவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஓசூர் தொகுதியில் கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக, மாவட்டச் செயலாளர் அருமை சகோதரர் ஒய்.பிரகாஷ் அவர்கள், ஏற்கனவே தளி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நம்முடைய கூட்டணி கட்சிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு பரந்த மனப்பான்மையோடு இந்த தொகுதிக்கு மாறி வந்திருக்கிறார். எவ்வாறு தளி தொகுதியில் பணியாற்றினாரோ அதேபோல ஓசூரிலும் பணியாற்றுவார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், வேப்பனஹள்ளி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் முருகன் அவர்கள், ஏற்கனவே அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பர்கூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மதியழகன் அவர்கள், மக்களுக்கு பணியாற்றுவதில் தொண்டு ஆற்றுவதில் ஒரு பண்பாளராக இருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஊத்தங்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அன்பிற்கினிய ஆறுமுகம் அவர்கள், அவருக்கு கை சின்னத்திலும், தளி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சகோதரர் ராமச்சந்திரன் அவர்கள், அவரும் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து அந்த தொகுதிக்கு பணியாற்றி மக்களுடைய அன்பை ஆதரவை பெற்றவர். அவருக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.

இவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல. நானும் ஒரு வேட்பாளர் தான். ஒட்டுமொத்த தமிழகத்திற்கு வேட்பாளராக நிற்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் நுழைவாயில் என்று போற்றப்பட்ட மாவட்டம் தான் இந்த கிருஷ்ணகிரி மாவட்டம். தமிழகத்தின் எல்லை நகருக்கு வந்திருக்கிறேன். இயற்கை வளமும் தொழில் வளமும் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தந்த அந்த உரிமையோடு உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தில் ஒருவர் இருக்கிறார். இந்த தொகுதியில் ஆளும் கட்சியின் சார்பில் நிற்கிறார். அமைச்சராக இல்லாமலேயே அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கே.பி.முனுசாமி.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது, பொதுக்குழு நடந்த நேரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷமிட்டார்கள். அதற்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, ‘கே.பி.முனுசாமியைப் பற்றிதான் கோஷமிடுகிறார்கள். எல்லாவற்றிலும் 30 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார். அதனால் அவருக்கு 30 சதவிகிதம் முனுசாமி என்று பட்டம் சூட்டி இருக்கிறார்கள்’ என்று சொன்னார்கள்.

அடுத்த நிமிடமே அவரது அமைச்சர் பதவியை அம்மையார் பறித்து விட்டார். இப்போது அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு ஒரு புது வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அவருடைய நினைவிடத்தில் தியானம் செய்து பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். அவருடன் கே.பி.முனுசாமி ஒட்டிக்கொண்டார்.

அதற்குப் பிறகு இதே கிருஷ்ணகிரியில் 2018 மார்ச் மாதம் உண்ணாவிரதம் இருந்தார். அந்த உண்ணாவிரதத்தில் வீர வசனம் பேசினார். அதன்பிறகு கட்சியில் பதவி கொடுத்தார்கள். எம்.பி. பதவியும் கிடைத்தது. அந்த பதவிகள் கிடைத்தவுடன் அம்மையார் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி வாய்திறக்கவில்லை. அதைப்பற்றி மறந்துவிட்டார்.

எனவே பன்னீரையும், பழனிசாமியையும் மிரட்டி பதவி வாங்கி விட்டார். அதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அவர் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

“ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் கேபினட் தான் இப்போதிருக்கும் ஆட்சி" - மு.க.ஸ்டாலின் பரப்புரை!

மீண்டும் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து இருக்கிறார்கள். இதற்கிடையில் இப்போது எம்.எல்.ஏ. சீட் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை நாம் தோற்கடிக்க வேண்டுமா? வேண்டாமா?

கே.பி.முனுசாமி அ.தி.மு.க.வுக்கு துணை நிற்கிறாரோ இல்லையோ… பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு ஏஜெண்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரணை வேண்டும் என்று சொல்லி இதே கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதம் இருந்தபோது, “ஜெயலலிதாவின் மரணத்தை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் யாராவது ஈடுபடவில்லை என்றால் அவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்” என்று சொன்னவர் அவர். அவ்வாறு சொன்ன கே.பி.முனுசாமி இந்த தேர்தலில் காணாமல் போகப் போகிறார். அதுதான் உண்மை. அதுதான் உறுதி.

இதுவரையில் இருந்த அரசுகளிலேயே ஊழல் மிகுந்த அரசு 1991-96-இல் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. தான். ஆனால் இப்போது அதையெல்லாம் தாண்டி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி தான் படுபயங்கரமான ஊழல் ஆட்சியாக இருக்கிறது.

கமிஷன் - கரப்ஷன் – கலெக்ஷன் இதனையே தொழிலாக கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடிய சர்வாதிகார ஆட்சி இது.

அவர்கள் என்ன ஊழல் - எதில் கமிஷன் - எப்படி கலெக்ஷன் செய்கிறார்கள் என்று ஆதாரங்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.

அதில் சிலவற்றைச் சுருக்கமாக நான் உங்களுக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

முதலமைச்சர் பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையில், 3,000 கோடிக்கு மேல் அவருடைய சம்பந்தி, சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டர் விட்டதில் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறோம்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் உள்ளன. அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சர்வீஸ் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். அந்த ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. டாலரில் லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்று அந்த நிறுவனமே நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கிறார்கள்.

உள்ளாட்சித் துறை – ஊழல் ஆட்சித் துறை அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் துறையின் மூலமாக தெருவிளக்கு மாற்றுவதில், ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதில், கொரோனா காலத்தில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

மின்சார அமைச்சர் தங்கமணி அவர்கள், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், காற்றாலை ஊழல், மின் கொள்முதலில் ஊழல், உதிரிபாகங்கள் கொள்முதல் செய்வதில் ஊழல் எனப் பல கோடி ரூபாய் அவர் துறையில் ஊழல் நடந்திருக்கிறது.

மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் முந்திரிக்கொட்டை ஜெயகுமார் அவர்கள், மீனவர்கள் பாதுகாப்புக்காக வாங்கும் வாக்கி டாக்கியில் கொள்ளை அடித்திருக்கிறார்.

வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பாரத் நெட் டெண்டரில் ஊழல் செய்திருக்கிறார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர், குட்காவை காவல்துறையினர் துணையோடு சதவிகிதக் கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு தாராளமாக விநியோகிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் கோடி கோடியாக கொள்ளை அடித்து இருக்கிறார். குவாரி ஊழல், கொரோனா தடுப்புக்கான கொள்முதலில் ஊழல் என அவரது ஊழல் பட்டியல் மேலும் நீள்கிறது.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கொரோனா காலத்தில் மத்திய அரசிடமிருந்து வந்த அரிசியை கொள்முதல் செய்ததில் கோடி கோடியாக கொள்ளை அடித்து இருக்கிறார்.

எனவே, ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஒரு ஊழல் கேபினட் தான் இப்போது இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.

“ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் கேபினட் தான் இப்போதிருக்கும் ஆட்சி" - மு.க.ஸ்டாலின் பரப்புரை!

ஆனால் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கடி, “நான் வெளிப்படையான நிர்வாகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை” என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இவர் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய, அப்பட்டமான அபாண்டமான பொய். இதை நான் சொல்லவில்லை. பொதுவாக இருக்கும் அறப்போர் இயக்கம் சார்பில் பத்திரிகையாளர்களிடம், “ஒரு குறிப்பிட்ட டெண்டர் இன்னாருக்குத்தான் கிடைக்கும்” என்று முன்கூட்டியே கூறியது.

அவ்வாறு அறப்போர் இயக்கம் யாருக்கு அறிவித்ததோ அவர்களுக்கே அந்த டெண்டர் வழங்கப்பட்டிருக்கிறது.

நெடுஞ்சாலைத்துறையாக இருந்தால் சம்பந்திக்கு கொடுக்கிறார்கள். எஸ்.பி.வேலுமணியாக இருந்தால் அவருடைய சகோதரர்களுக்கு, பினாமிகளுக்கு கொடுக்கிறார்கள். அமைச்சர்கள் எல்லாம் இன்னாருக்கத்தான் டெண்டர் என்று பிரித்து, பிரித்து கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த ஒருமாத கால இடைவெளியில் ஏறக்குறைய 3,000க்கு மேல் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்.

அதனால்தான் தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக முதலமைச்சரிலிருந்து அமைச்சர்கள் வரை என்னென்ன ஊழல்கள் செய்து இருக்கிறார்களோ, அந்த ஊழல்களை கண்டுபிடிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற உறுதி மொழியை அறிவித்திருக்கிறோம்.

ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட வெற்றி பெறக்கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார். பா.ஜ.க. வருவதற்கான வாய்ப்பே இல்லை. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நான் தொடக்கத்தில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். நேற்றைக்கு புதிய தலைமுறை ஒரு கருத்துகணிப்பு வெளியிட்டிருக்கிறது. நம்முடைய அணிதான் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்று சொல்லியிருக்கிறது.

தொடர்ந்து 10 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வருகிறேன். அதனுடைய உணர்வின் அடிப்படையில் சொல்கிறேன் - 200 அல்ல, 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

எனவே இந்த உதவாக்கரை ஆட்சிக்கு நாம் பாடம் புகட்டுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு சொல்வதற்கு காரணம், பா.ஜ.க.வுக்கு - மோடிக்கு கைகட்டி, வாய் பொத்தி ஒரு அடிமையாக இன்றைக்கு பழனிசாமி அவர்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

காவிரி உரிமையை நிலைநாட்ட முடிந்ததா? நீட் தேர்வை தடுக்க முடிந்ததா? ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க போராட முடிந்ததா? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியைப் பெற முடிந்ததா? மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர முடிந்ததா? இந்த லட்சணத்தில் வெட்கமே இல்லாமல் மோடியை டாடி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது தான் வேடிக்கை.

இந்த அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக்கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் அமைச்சர்களும் கோட்டுப் போட்டுக்கொண்டே வெளிநாடு சென்று வந்தார்களே தவிர, யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்நிறுவனங்களும் கொண்டுவரப்படவில்லை.

“ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் கேபினட் தான் இப்போதிருக்கும் ஆட்சி" - மு.க.ஸ்டாலின் பரப்புரை!

மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல் என ஏராளமான வாக்குறுதிகளை நமது தேர்தல் அறிக்கையில் வழங்கி இருக்கிறோம்.

தொழில் வளர்ச்சிக்கான பல வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளோம். அவற்றில் சில, கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்கவும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணையில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும். டிட்கோ - சிட்கோ போன்ற முன்னோடி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதுபோல, வங்கிகள் - நிதி நிறுவனங்களோடு இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியினை ஏற்பாடு செய்ய சிறப்பு நிறுவனங்கள் உருவாக்கப்படும். தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க அரசு துறைகள், நிதி நிறுவனங்கள், தொழில் துறையினர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். தொழிலாளர்கள் நல வாரியங்கள் முழு வீச்சில் செயல்படும்.

விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாக்குறுதிகள், மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண் துறையில் தனிப்பிரிவு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் உருவாக்கப்படும். மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் மகளிருக்கான சிறப்புத் திட்டங்கள், உதவிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, கிருஷ்ணகிரி, தேன்கனிகோட்டை, ராயக்கோட்டையில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். போச்சம்பள்ளியில் கனிம பொருள் ஏற்றுமதி மையம், பூக்கள் ஏற்றுமதி மையம், சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை உருவாக்கப்படும். ஓசூர் தகவல் தொழில்நுட்ப பூங்கா மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூரில் ஆண் பணியாளர்களுக்கும், பெண் பணியாளர்கள் இருபாலரும் தங்குவதற்கான விடுதிகள் தனித்தனியே கட்டப்படும். பர்கூரில் அரசு கலை - அறிவியல் கல்லூரி, ஜவுளி பூங்கா உருவாக்கப்படும். கிருஷ்ணகிரியில் நறுமணத் தொழிற்சாலை, அரசு வேளாண்மை கல்லூரி, மாம்பழக்கூழ் தொழிற்சாலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம். ஓசூரில் கூடுதல் சிப்காட் தொழிற்பேட்டை. பகலுர், அஞ்செட்டி, மத்திகிரியில் பேருந்து நிலையம் உருவாக்கப்படும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து உபரி நீர் ஓசூர், வேப்பனஹள்ளி ஏரிகளில் நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவை அனைத்தும் நாம் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடத்திற்குள் நிறைவேற்றப்படவிருக்கின்ற சில திட்டங்கள்.

ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்களை சொல்லியிருக்கிறேன்.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.

“ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் கேபினட் தான் இப்போதிருக்கும் ஆட்சி" - மு.க.ஸ்டாலின் பரப்புரை!

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது மட்டுமல்ல இந்த தேர்தல். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்படவேண்டும். தன் மானம் காப்பாற்றப்பட வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்டிட வேண்டும்.

எனவே ஒட்டுமொத்தத் தமிழகத்தை மீட்கத்தான் இந்தத் தேர்தல் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எனவே மாநில உரிமைகளைக் காக்க, தொழில் வளர்ச்சியைப் பெருக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுமையான வெற்றியைப் பெற நீங்கள் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு, பண்போடு, பாசத்தோடு, பரிவோடு, உரிமையோடு, உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, அனைத்திற்கும் மேலாக தலைவர் கலைஞருடைய மகனாக உங்கள் பாத மலர்களை தொட்டு கேட்கிறேன். மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள் என்று அன்போடு கேட்டு உங்கள் அன்பிற்கும் உற்சாகத்திற்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். வணக்கம்.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories