கர்நாடகா முழுவதும் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிற விவகாரம், கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது. தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை, படுக்கை அறைக்கு அழைத்து மிரட்டி ஆபாசமாக நடந்துகொண்ட வீடியோக்கள் வெளியான நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பாரதிய ஜனதா ஆட்சியின்போது மூன்று அமைச்சர்கள் சட்டசபைக்குள் ஆபாச வீடியோக்களை பார்த்த விவகாரம் பூதாகரமாகி அவர்களும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சரான ராஜேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோவால் சிக்கி தன் பதவியை இழந்திருப்பது மட்டுமல்லாமல், வேறு ஒரு அமைச்சருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், “தாங்கள் சம்பந்தப்பட்ட எந்தவிதமான வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது” என்று பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கர்நாடக பா.ஜ.க அமைச்சர்கள் 6 பேர் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார், விவசாயத்துறை அமைச்சர் பிசி பாட்டில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாராயண கவுடா, கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி சோமசேகர், நகர வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி பசவராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உள்ளிட்ட 6 பா.ஜ.க அமைச்சர்களும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தங்கள் சம்பந்தமான எந்தவிதமான சொந்த வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது எனக் கூறியுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.