பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல், நடிகை டாப்ஸி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் ஆகியோர் இணைந்து நடத்திய தயாரிப்பு நிறுவனம் 'பேன்டன்' பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால்தான் அனுராக், டாப்ஸி ஆகியோரை மிரட்டுவதற்காகவே, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், டாப்ஸிக்கும், அனுராக் காஷ்யப்புக்கும் ஆதரவாக எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், டாப்சி வீட்டில் நடந்த சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான பண ரசீது ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. நடிகை டாப்ஸி வருமான வரி சோதனையைக் கிண்டல் செய்யும் விதமாக, 3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது என அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் வெளியிட்ட 3 விஷயங்கள் ,"1. எனக்குச் சொந்தமாக பாரிஸ் நகரத்தில் ஒரு பங்களா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை வரப்போகிறது.
2. நான் வேண்டாம் என மறுத்திருந்த 5 கோடி ரூபாய்க்கான ரசீது. எதிர்காலத்தில் என்னை சிக்கவைக்க உதவும் என்கிற நோக்கத்தோடு எடுத்திருக்கிறார்கள்.
3. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகளைத் தேடினார்கள்" என வருமான வரி சோதனையைக் கிண்டலடிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை டாப்ஸியின் இந்த ட்விட்டர் பதிவைப் பலர் பகிர்ந்து வருகின்றனர்.