நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல் வழக்கில் நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்பு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர், ஆடைக்கு மேலே ஒரு குழந்தையின் உடலை தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்றும், மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது, பாலியல் வன்கொடுமை செய்தவரே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்டால் ஜாமின் வழங்குவதாக நீதிமன்றம் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள மின்சார வாரியத்தில் அரசு ஊழியராக பணிபுரியும் ஒருவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தல் மற்றும் வன்கொடுமை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள விருப்பமா? அவ்வாறு திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தால், இந்த ஜாமின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இல்லையென்றால் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகும்” எனத் தெரிவித்தனர்.
இதில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர், அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளதால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறினார். கடந்த 2016ம் ஆண்டில் மைனராக இருந்த புகார்தாரரை திருமணம் செய்ய தனது கட்சிக்காரர் முன்வந்ததாகவும், ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிபதிகளின் இத்தகைய கேள்வி உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளே திருமணம் செய்யுமாறு கூறுவது, பாலியல் வன்கொடுமை குற்றங்களை அற்பமாகக் கருதுவதாகிறது.
அதுமட்டுமல்லாமல், பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு சமூகத்தால் பார்க்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. நீதிபதிகளின் இதுபோன்ற அறிக்கை மிகவும் கவலை அளிக்கிறது. மேலும் இது ஆணாதிக்க மனநிலையைக் காட்டுவதாகவும் வழக்கறிஞர் ஷோபா கூறியுள்ளார்.