கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையான குளிரில் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
ஆனால் மத்திய மோடி அரசோ அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதோடு ஜனநாயக முறையில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை குலைக்க, இணையம், குடிநீர், மின்சாரம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் ரத்து செய்து அராஜக பாணியை கையாண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 8ம் தேதி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
அவர் பேசியதாவது:- “நாட்டில் புதிதாக அந்தோலன் ஜீவி (போராட்டக்காரர்கள்) என்ற இனம் ஒன்று உருவாகியுள்ளது. அவர்கள் ஒட்டுண்ணிகள் போன்றவர்கள். அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
இதற்கு பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். அதில், “வாழ்வாதாரத்தை காப்பதற்காக போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி ஒட்டுண்ணிகள் என்று கூறுகிறார். கடுமையான குளிரில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்காமல் கண்களையும், காதுகளையும் மத்திய அரசு மூடிக் கொண்டிருக்கிறது.
குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது விளை பொருட்களின் குறைந்தபட்ச விலையை உறுதி செய்வதில் துணை நின்ற நரேந்திர மோடி தற்போது தலைகீழாக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு போராடும் விவசாயிகளை அனைத்து வகையிலும் இழிவுபடுத்தி வருகிறார்.” எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து விவசாயிகளை நலன் குறித்து பேச தன்னுடைய அமைச்சர்களை அனுப்பாத மத்திய பாஜக அரசு, போராடுவோரை நக்சல்கள், காலிஸ்தானியர்கள் எனக் குறிப்பிடுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த பிறகு அவர்களுக்காக மான் கி பாத் நிகழ்ச்சியில் ஒரு வார்த்தையையும் உதிக்காதவர். இது பாஜக அரசின் ஆணவத்தை குறிக்கிறது.” எனக் கூறியுள்ளார்.