விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரபல பஞ்சாபி நடிகர் சித்துவிற்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடியாது என பா.ஜ.க அரசு பிடிவாதம் செய்வதால் போராட்டங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களை பா.ஜ.க ஆட்சியாளர்கள் தேசவிரோதிகளாகச் சித்தரித்து வருகின்றனர். அவர்கள் மீது பயங்கர சட்டங்களை ஏவி மிரட்டி வருகிறது மோடி அரசு.
இந்நிலையில், மக்கள் பலனுக்கான நீதி சொஸைட்டி எனும் விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிர்சா உள்ளிட்ட பலருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சம்மன் அனுப்பியுள்ளது. பிரபல பஞ்சாபி நடிகரான தீப் சிங் சித்துவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பஞ்சாப் திரையுலக ரசிகர்களின் அபிமானம் பெற்ற சித்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்தது பெரும் வரவேற்பை பெற்றது. அவருக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சித்து, கடந்த 2019 மக்களவை தேர்தலில் பஞ்சாபில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்திருந்தார். ஆனாலும், பா.ஜ.க அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்ததால் சித்துவிற்கு குடைச்சல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சித்து கூறுகையில், "இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. போராட்டத்தை ஒடுக்க இதுபோல் பல்வேறு வகை மிரட்டல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. என்.ஐ.ஏவின் இந்த சம்மனை விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பங்காக எண்ணி எதிர்கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.