மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் தி.மு.க எம்.பி., கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி பயிர்களை மூழ்கடித்துள்ளது.
மேலும், நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சாளம் உள்ளிட்ட பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், பெய்துவரும் தொடர் மழையால் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தநிலையில் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கோரப்பட்ட நிலையில், ரூ.8 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக அறிவித்துள்ளது அரசு. இது விவசாயிகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, “தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.