கொரோனா தொற்று இருப்பதை துல்லியமாக கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளிலும், ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் இந்த கட்டண நிர்ணயம் மாநிலங்களுக்கு மாநிலமும், மாநிலங்களுக்குள்ளும் மாறுபடுகிறது. இதனால் மக்கள் மேன்மேலும் அவதியுற்று வருகின்றனர்.
இப்படி இருக்கையில், இந்திய முழுவதும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை 400 ரூபாயில் செய்ய உத்தரவிடக் கோரிய மனு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கொரோனா பரிசோதனைகள் வெறும் 200 ரூபாயில் செய்து முடிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு ஏற்றது போல கட்டணம் நிர்ணயம் செய்யதுள்ளனர்.
எனவே இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் அஜய் அகர்வால் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.